Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
உள்ளூர்

பரதநாட்டிய ஆசிரியை சுபித்ரா கிருபாகரனுக்கு மாணவர்களின் நாட்டியாஞ்சலி; நெகிழ்ச்சியில் மூழ்கிய இறுதி அஞ்சலி

21 Jul 2026, 04:02 PM
பார்வைகள்: 107
பரதநாட்டிய ஆசிரியை சுபித்ரா கிருபாகரனுக்கு மாணவர்களின் நாட்டியாஞ்சலி; நெகிழ்ச்சியில் மூழ்கிய இறுதி அஞ்சலி

இலங்கையின் முன்னணி பரதநாட்டிய ஆசிரியரும், கலாபூசணம் மற்றும் பரதசூடாமணி பட்டங்களைப் பெற்றவருமான சுபித்ரா கிருபாகரனின் இறுதிச்சடங்கு நேற்று (20) மட்டக்களப்பில் நடைபெற்றது. அப்போது, அவரது மாணவ, மாணவிகள் கண்ணீருடன் நிகழ்த்திய நாட்டியாஞ்சலி அங்கு கூடியிருந்தவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

மட்டக்களப்பில் ‘பரதகலாலயா’ என்ற நாட்டியப் பள்ளியை நிறுவி நடத்தி வந்த சுபித்ரா கிருபாகரன், இலங்கை மட்டுமன்றி வெளிநாடுகளிலும் அதன் கிளைகளை உருவாக்கி, பல பரதநாட்டியக் கலைஞர்களையும் ஆசிரியர்களையும் உருவாக்கியவர். பரதநாட்டியக் கலையின் வளர்ச்சிக்காக பல தசாப்தங்களாக அவர் ஆற்றிய பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாகும்.

சுகவீனம் காரணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை (19) காலமான அவரது இறுதிக்கிரியைகள் அவரது இல்லத்தில் நடைபெற்றன. இதில், தங்களது குருவுக்கு இறுதி மரியாதை செலுத்தும் வகையில் மாணவர்கள் நாட்டிய சமர்ப்பணத்தை நிகழ்த்தினர். இந்த உணர்வுபூர்வமான நாட்டியாஞ்சலி நிகழ்வின் காணொளிகள் சமூக வலைத்தளங்களிலும் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன.

இறுதிச்சடங்கில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா. சிறிநேசன், கலைஞர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். சுபித்ரா கிருபாகரனின் கலைச் சேவை அவரது மாணவர்களின் வழியாக தொடர்ந்து நிலைத்திருக்கும் என பலரும் நினைவுகூர்ந்தனர்.

புகைப்பட தொகுப்பு (Gallery)