Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
உள்ளூர்

வடக்கு, கிழக்கு கடற்கரைகளை பாதுகாக்க கடும் சட்ட நடவடிக்கை; அதிகாரிகளுக்கு ஜனாதிபதி உத்தரவு

23 Jul 2026, 11:15 AM
பார்வைகள்: 155
வடக்கு, கிழக்கு கடற்கரைகளை பாதுகாக்க கடும் சட்ட நடவடிக்கை; அதிகாரிகளுக்கு ஜனாதிபதி உத்தரவு

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நேற்று (22) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில், சுற்றாடல் அமைச்சின் 2026ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் திட்டங்களின் முன்னேற்றம் மீளாய்வு செய்யப்பட்டது.

இதன்போது, வடக்கு மற்றும் கிழக்கில் புதிதாக அபிவிருத்தி செய்யப்பட்டு வரும் கடற்கரைப் பகுதிகளை பாதுகாக்க உடனடி மற்றும் கடுமையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

கடற்கரை அபிவிருத்தி செய்யப்பட்ட பின்னர் சட்டவிரோதமாக கட்டிடங்கள் நிர்மாணிக்கப்படுவதால் கடற்கரைக்கு கடுமையான பாதிப்புகள் ஏற்படுவதாக சுட்டிக்காட்டிய அவர், இத்தகைய செயல்களைத் தடுக்க விசேட செயற்பாட்டுக் குழுவொன்றை அமைத்து சட்டத்தை தீவிரமாக அமுல்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

மேலும், ஒலுவில் பகுதியில் தீவிரமடைந்துள்ள கடலரிப்பை கட்டுப்படுத்துவதற்கான நீடித்த தீர்வுகளை ஆராய நிபுணர் குழுவொன்றை நியமித்து, விரைவில் அறிக்கை சமர்ப்பிக்குமாறும் ஜனாதிபதி பணிப்புரை வழங்கினார்.

மனித–யானை மோதலைக் குறைக்கும் நோக்கில் 2026ஆம் ஆண்டுக்காக ஒதுக்கப்பட்ட நிதியின் கீழ் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் மந்தமாக நடைபெறுவது குறித்து கவலை வெளியிட்ட ஜனாதிபதி, தேவையான நிதி வழங்கப்பட்டிருந்தும் திட்டங்கள் தாமதமடைவது ஏற்றுக்கொள்ள முடியாதது என தெரிவித்தார்.

கிராமப்புற மக்களின் உயிர் மற்றும் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில், இவ்வாண்டுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை முழுமையாக பயன்படுத்தி திட்டமிட்ட நிர்மாணப் பணிகளை ஆண்டுக்குள் நிறைவு செய்யுமாறும் அவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

அதேவேளை, யானை வேலிகள் வனவிலங்கு எல்லைகளை குறிக்க மட்டுமல்லாமல், மக்களின் உயிர் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் அமைக்கப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

இந்நிகழ்வில் கருத்து தெரிவித்த சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக பட்டபெந்தி, இலங்கைக்கான தரமான கார்பன் உமிழ்வுக் கொள்கையை உருவாக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அதன் மூலம் புதிய முதலீட்டு வாய்ப்புகளை ஈர்க்க முடியும் என்றும் தெரிவித்தார்.

மேலும், வனஜீவிகள் மற்றும் வனப்பாதுகாப்புத் திணைக்களங்களின் ஓய்வு விடுதிகளை நவீனமயப்படுத்துதல், தேசிய தாவரவியல் பூங்காக்களை மேம்படுத்துதல் மற்றும் மலர் வளர்ப்பை கைத்தொழிலாக ஊக்குவிக்கும் திட்டங்கள் தொடர்பிலும் கூட்டத்தில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.