Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
உள்ளூர்

பதுளை உனுகல்ல தோட்ட முகாமையாளரை நீக்கக் கோரி தொழிலாளர்கள் தொடர் வேலைநிறுத்தம்

23 Jul 2026, 11:25 AM
பார்வைகள்: 158
பதுளை உனுகல்ல தோட்ட முகாமையாளரை நீக்கக் கோரி தொழிலாளர்கள் தொடர் வேலைநிறுத்தம்

பதுளை மாவட்டம், உனுகல்ல தோட்டத்தில் இளைஞர் ஒருவரை தாக்கியதாக குற்றஞ்சாட்டப்படும் தோட்ட முகாமையாளரை உடனடியாகப் பதவியில் இருந்து நீக்கக் கோரி, தோட்டத் தொழிலாளர்கள் கடந்த ஐந்து நாட்களாக தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மல்வத்தவெளி பெருந்தோட்ட நிறுவனத்திற்குச் சொந்தமான உனுகல்ல தோட்டத்தின் உனுகல்ல பிரிவைச் சேர்ந்த தொழிலாளியின் மகனான கோகுலநாத் மனோஜ்காந்த், தனது வீட்டுக்கு அருகில் கோழிக்கூண்டு அமைப்பதற்கான அனுமதி கோரி கடந்த ஏப்ரல் மாதம் தோட்ட முகாமையாளரிடம் விண்ணப்பித்திருந்தார்.

எனினும், மூன்று மாதங்கள் கடந்தும் பதில் கிடைக்காத நிலையில், கடந்த ஜூன் 17ஆம் திகதி இது தொடர்பாக விளக்கம் கேட்கச் சென்றபோது ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தின் பின்னர், தோட்ட முகாமையாளர் சாணக்க தன்னைத் தாக்கியதாக மனோஜ்காந்த் ஹாலிஎல பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். தாக்குதலுக்குள்ளான அவர் அதே நாளில் ஹாலிஎல வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தச் சம்பவத்தைக் கண்டித்தும், சம்பந்தப்பட்ட முகாமையாளரை உடனடியாகப் பதவியில் இருந்து நீக்க வலியுறுத்தியும், உனுகல்ல தோட்டத்தின் நான்கு பிரிவுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் கடந்த ஜூலை 18ஆம் திகதி முதல் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும், தோட்ட நிர்வாக அலுவலக அதிகாரிகள் தொழிலாளர்களுக்கு உரிய சேவைகளை வழங்குவதில்லை என்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

போராட்டம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, கடந்த ஜூலை 20ஆம் திகதி தோட்டத்தின் உயர்மட்ட முகாமையாளரான சமிந்த பெரேரா சம்பவ இடத்துக்கு சென்று தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்நிலையில், தொழிற்சங்கங்களின் கோரிக்கைக்கு அமைவாக, இந்த விவகாரம் தொடர்பில் தீர்வு காணும் நோக்கில் பதுளை மாவட்ட உதவி தொழில் ஆணையாளர் அலுவலகத்தில், உதவி தொழில் ஆணையாளர் தலைமையில் இன்று விசேட கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.