Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
உள்ளூர்

டெங்கு பரிசோதனையின்போது வீட்டில் துப்பாக்கி மீட்பு; பெண் ஒருவர் கைது

23 Jul 2026, 12:00 PM
பார்வைகள்: 199
டெங்கு பரிசோதனையின்போது வீட்டில் துப்பாக்கி மீட்பு; பெண் ஒருவர் கைது

தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தின் கீழ் பெலவத்தை பகுதியில் நேற்று (22) முன்னெடுக்கப்பட்ட விசேட வளாகப் பரிசோதனையின்போது, வீடொன்றில் இருந்து துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டதையடுத்து, அந்த வீட்டின் உரிமையாளரான பெண் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பத்தரமுல்லை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், இராணுவம், விமானப்படை, இலங்கை பொலிஸ் மற்றும் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் ஒத்துழைப்புடன் இந்த விசேட சோதனை நடவடிக்கையை மேற்கொண்டனர்.

பெருமளவிலான நாய்கள் வளர்க்கப்பட்டு மிகவும் அசுத்தமான நிலையில் காணப்பட்ட வீட்டை சோதனையிட்டபோது, உயிருள்ள டெங்கு நுளம்புக் குடம்பிகளுடன் துப்பாக்கி ஒன்றும் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து, துப்பாக்கியை பொலிஸார் பொறுப்பேற்றதுடன், வீட்டின் உரிமையாளரையும் கைது செய்து மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இதற்கிடையில், உயிருள்ள நுளம்புக் குடம்பிகள் காணப்பட்ட மற்றொரு வீட்டில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின்போது, வீட்டின் உரிமையாளர் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாகவும், இதனால் அங்கு பதற்றமான நிலை ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய வகையில் வளாகங்களை பராமரித்த குற்றச்சாட்டின் கீழ், இந்த நடவடிக்கையின் போது அடையாளம் காணப்பட்ட 13 பேருக்கு எதிராக கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

டெங்கு பரவலைத் தடுக்க, நுளம்புகள் பெருகக்கூடிய இடங்களை உடனடியாக அகற்றி, டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறு சுகாதார அதிகாரிகள் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.