Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
உள்ளூர்

மலையகத்தின் மூத்த தொழிற்சங்கத் தலைவர் தவசிதேவர் ஐயாத்துரை காலமானார்

26 Jul 2026, 10:22 AM
பார்வைகள்: 121
மலையகத்தின் மூத்த தொழிற்சங்கத் தலைவர் தவசிதேவர் ஐயாத்துரை காலமானார்

மலையகத்தின் மூத்த தொழிற்சங்கத் தலைவர், ஆய்வாளர் மற்றும் எழுத்தாளரான தவசிதேவர் ஐயாத்துரை இன்று காலமானார். அவரது மறைவு மலையக சமூகத்தினரிடையே ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.

'மாத்தளை ரோகிணி' என்ற புனைப்பெயரில் இலக்கிய உலகில் அறியப்பட்ட அவர், கம்பளை புசத்தன தோட்டத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தோட்டத் தொழிலாளியாக தனது வாழ்க்கையைத் தொடங்கிய அவர், பின்னர் மலையக மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்த முக்கிய தொழிற்சங்கத் தலைவராக உயர்ந்தார்.

ஆரம்பத்தில் திராவிட இயக்கக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட அவர், பின்னர் மறைந்த வி.கே. வெள்ளையுடன் இணைந்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸிலிருந்து விலகி தொழிலாளர் தேசிய சங்கத்தை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றினார். வி.கே. வெள்ளையின் மறைவுக்குப் பின்னர், 1971ஆம் ஆண்டு தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவராக பொறுப்பேற்று அதன் கொள்கைகளுக்கு ஏற்ப சங்கத்தை வழிநடத்தினார்.

இலக்கியத் துறையிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கிய அவர், 'உரிமைப் போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகள்' என்ற நூலுடன், 'பூங்கோதை புயலானாள்', 'வந்த துன்பம் போதும்', 'அவனுக்கு அவள் துணை' உள்ளிட்ட தொடர் கதைகளையும் எழுதியுள்ளார். மேலும், 'இதயத்தில் இணைந்த இரு மலர்கள்' என்ற நாவலையும் வெளியிட்டுள்ளார்.

அரசியல் துறையிலும் செயற்பட்ட அவர், 1993ஆம் ஆண்டு நடைபெற்ற மத்திய மாகாண சபைத் தேர்தலில் வெற்றி பெற்று உறுப்பினராகத் தேர்வானார். இதற்கு முன்னர், 1977ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் நுவரெலியா–மஸ்கெலியா மூன்று உறுப்பினர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டு நான்காவது இடத்தைப் பெற்றிருந்தார்.

தொழிற்சங்கப் போராட்டம், அரசியல் மற்றும் இலக்கியம் ஆகிய துறைகளில் நீண்டகால சேவையாற்றிய தவசிதேவர் ஐயாத்துரையின் மறைவு மலையக சமூகத்திற்கும் தொழிற்சங்க இயக்கத்திற்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாகக் கருதப்படுகிறது.