Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
உள்ளூர்

புத்தளம், பேருவளை, நீர்கொழும்பு மக்களுக்கு அவசர எச்சரிக்கை!

01 Aug 2026, 06:45 PM
பார்வைகள்: 127
புத்தளம், பேருவளை, நீர்கொழும்பு மக்களுக்கு அவசர எச்சரிக்கை!

கொழும்பு துறைமுகத்துக்கு மேற்கே சுமார் 17 கடல் மைல் தொலைவில் உள்ள கடற்பரப்பில், வர்த்தகக் கப்பலொன்றிலிருந்து 17 வெற்று சரக்கு கொள்கலன்கள் கடலில் விழுந்து மிதந்து வருவதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தற்போதைய கடல் நீரோட்டத்தின் திசையை கருத்தில் கொண்டு, இந்த கொள்கலன்கள் பேருவளையிலிருந்து நீர்கொழும்பு ஊடாக புத்தளம் வரையிலான கடற்பரப்பை நோக்கி அடித்துச் செல்லப்பட்டு கரையொதுங்கும் அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதனால், குறித்த கடற்பகுதிகளில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவோரும், கடற்பயணங்களை மேற்கொள்வோரும் மிகுந்த அவதானத்துடனும் எச்சரிக்கையுடனும் செயற்படுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும், மிதந்து வரும் சரக்கு கொள்கலன்கள் ஏதேனும் தென்பட்டால், உடனடியாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் வானொலிச் செய்தி மையத்திற்கோ அல்லது அருகிலுள்ள கடற்றொழில் துறைமுக அதிகாரிகளுக்கோ தகவல் வழங்குமாறும் பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.