Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
உள்ளூர்

பேராதனைப் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம்

03 Aug 2026, 02:19 PM
பார்வைகள்: 199
பேராதனைப் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம்

நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் அனைத்து கல்வி நடவடிக்கைகள் மற்றும் பரீட்சைகள் மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மாணவர்களுக்கு வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, பல்கலைக்கழக வளாகத்தில் இயங்கும் அனைத்து அத்தியாவசிய சேவைகளும் வழக்கம்போல் தொடர்ந்து செயல்படும் என்றும் நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது.

பாதுகாப்பாக தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்லக்கூடிய மாணவர்கள் வளாகத்திலிருந்து புறப்பட அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், கடுமையான காலநிலை காரணமாக பயணம் செய்ய முடியாத மாணவர்கள், சரசவி மெதுர (Sarasavi Medura) விடுதியைத் தவிர ஏனைய பல்கலைக்கழக விடுதிகளில், சம்பந்தப்பட்ட விடுதி அதிகாரிகளுக்கு அறிவித்த பின்னர் தங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எந்தவொரு மாணவரும் தங்களது விடுதி அறையை விட்டு வெளியேறுமாறு கட்டாயப்படுத்தப்பட மாட்டார்கள் என்றும் பல்கலைக்கழக நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது.

மேலும், அதிக ஆபத்து நிலவும் பகுதிகளில் உள்ள தனியார் விடுதிகளில் தங்கியிருக்கும் மாணவர்கள், வளாகத்தில் தற்காலிக தங்குமிடத்தை கோரினால் அதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தகைய மாணவர்களுக்கு தேவையான தங்குமிட வசதிகளை வழங்குவதோடு, அதற்கான பதிவுகளை முறையாக பராமரிக்குமாறும் விடுதி அதிகாரிகளுக்கு பல்கலைக்கழக நிர்வாகம் பணிப்புரை விடுத்துள்ளது.