Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
உள்ளூர்

‘Hi’ என வரும் செய்திகளால் மோசடி – பொதுமக்களுக்கு எச்சரிக்கை

09 Aug 2026, 10:12 AM
பார்வைகள்: 120
‘Hi’ என வரும் செய்திகளால் மோசடி – பொதுமக்களுக்கு எச்சரிக்கை

Facebook, Messenger, Instagram மற்றும் WhatsApp உள்ளிட்ட சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட கப்பம் கோரும் மோசடி தொடர்பில் இலங்கை கணினி அவசர பதிலளிப்பு மன்றம் (SLCERT) விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மோசடி நடவடிக்கைகள் இந்தியாவிலிருந்து முன்னெடுக்கப்படுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மோசடிக்காரர்கள் முதலில் தங்களது இலக்காகக் கருதும் நபர்களின் சகோதரர்கள், சகோதரிகள் உள்ளிட்ட உறவினர்கள் மற்றும் நண்பர்களை சமூக வலைத்தளங்களில் நண்பர்கள் பட்டியலில் இணைத்துக்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர், Instagram ஊடாக அழகான பெண்ணின் புகைப்படத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட போலிக் கணக்கிலிருந்து குறித்த நபர்களுக்கு ‘Hi’ எனக் குறுஞ்செய்தி அனுப்பப்படுகிறது.

அதற்கு பதிலளிக்கும் நபர்களை அவதானித்து, சில நாட்களுக்குப் பின்னர் மீண்டும் அவர்களுடன் உரையாடலைத் தொடங்குகின்றனர்.

தொடர்ந்து, ஆபாசமான புகைப்படங்கள் அல்லது காணொளிகளை அனுப்பி, பதிலுக்கு தனிப்பட்ட புகைப்படங்கள் அல்லது WhatsApp வீடியோ அழைப்பில் அந்தரங்க காட்சிகளை பகிருமாறு தூண்டுகின்றனர்.

இவ்வாறு பெறப்படும் காணொளிகளைப் பதிவு செய்து வைத்துக்கொள்ளும் மோசடிக்காரர்கள், பின்னர் அவற்றை குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்களுக்கு அனுப்பிவிடுவதாக அச்சுறுத்தி, பணம் மற்றும் கப்பம் கோருவதாக SLCERT தெரிவித்துள்ளது.

எனவே, அடையாளம் தெரியாத சமூக வலைத்தளக் கணக்குகள் அல்லது தொலைபேசி இலக்கங்களில் இருந்து வரும் குறுஞ்செய்திகள், நண்பர் கோரிக்கைகள் மற்றும் அழைப்புகளுக்கு பதிலளிக்கும் போது மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.