Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
உள்ளூர்

அஸ்வெசும நிதி மோசடி: மேலும் 2 அதிகாரிகள் அதிரடியாக பணிநீக்கம்

09 Aug 2026, 10:19 AM
பார்வைகள்: 130
அஸ்வெசும நிதி மோசடி: மேலும் 2 அதிகாரிகள் அதிரடியாக பணிநீக்கம்

நோர்வூட் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் 16 மில்லியன் ரூபாய் அஸ்வெசும நிதி மோசடி தொடர்பில் மேலும் இரண்டு முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் துஷாரி தென்னகோன் தெரிவித்துள்ளார்.

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வழங்கப்பட வேண்டிய அஸ்வெசும கொடுப்பனவுகள், முறைகேடாக அதிகாரிகள் மற்றும் அவர்களது உறவினர்களின் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகிக்கப்படும் 11 அரச ஊழியர்களுக்கு எதிராக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதன்படி, தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தைச் சேர்ந்த இரண்டு அதிகாரிகள் கொழும்புக்கு அழைக்கப்பட்டு அவர்களிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மேலும், ஹட்டன் கல்வி வலயத்தைச் சேர்ந்த ஆறு ஆசிரியர்கள் மற்றும் காவல்துறை அலுவலகத்தைச் சேர்ந்த ஒரு ஊழியர் தொடர்பிலும் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த மோசடி சம்பவம் தொடர்பில் இதுவரை இரண்டு அதிகாரிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

ஏனைய சந்தேகநபர்கள் தொடர்பிலும் சட்ட நடவடிக்கை எடுக்கும் வகையில், ஹட்டன் காவல்துறையின் விசேட குற்ற விசாரணைப் பிரிவில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அஸ்வெசும நிதி முறைகேடு தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், விசாரணைகளின் முடிவுகளின் அடிப்படையில் மேலும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.