Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
உள்ளூர்

ஜனாதிபதி அநுரவின் அதிரடி நடவடிக்கை! உண்மையை வெளிப்படுத்தினால் வழக்கிலிருந்து விடுவிக்கும் புதிய அதிகாரம்

10 Aug 2026, 10:10 AM
பார்வைகள்: 110
ஜனாதிபதி அநுரவின் அதிரடி நடவடிக்கை! உண்மையை வெளிப்படுத்தினால் வழக்கிலிருந்து விடுவிக்கும் புதிய அதிகாரம்

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் முக்கியமான உண்மைகளை வெளிப்படுத்தும் நபர்களுக்கு எதிராக வழக்குத் தொடராமல் இருப்பதற்கும், ஏற்கனவே தொடரப்பட்ட வழக்குகளை மீளப் பெறுவதற்கும் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்திற்கு அதிகாரம் வழங்கும் வகையில் புதிய சட்டத் திருத்தம் முன்வைக்கப்பட்டுள்ளது.

2023ஆம் ஆண்டின் 9ஆம் இலக்க ஊழல் தடுப்புச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பணிப்புரையின் பேரில் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்தில் இந்த ஏற்பாடு உள்ளடக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுடன் தொடர்புடைய ஒருவர், அந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக தமக்குத் தெரிந்த அனைத்து உண்மைகளையும் முழுமையாக வெளிப்படுத்தும் பட்சத்தில், அவருக்கு எதிராக வழக்குத் தொடராமல் இருப்பதற்கும் அல்லது ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட வழக்கை மீளப் பெறுவதற்கும் பணிப்பாளர் நாயகத்திற்கு அதிகாரம் வழங்கப்படவுள்ளது.

நீதவான் நீதிமன்ற வழக்குகளுக்கும் அதிகாரம்

முன்னதாக மேல்நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் தொடர்பில் காணப்பட்ட அதிகாரம், புதிய திருத்தங்களின் மூலம் விரிவுபடுத்தப்படவுள்ளது.

இதன்படி, நீதவான் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஊழல் தொடர்பான வழக்குகளையும் மீளப் பெறுவதற்கான அதிகாரம் பணிப்பாளர் நாயகத்திற்கு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஊழல் மூலம் பெறப்பட்ட அல்லது ஊழல் நடவடிக்கைகளின் ஊடாக வேறு வழிகளில் மாற்றப்பட்ட சொத்துகளின் மதிப்பை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள இந்தத் திருத்தங்கள் வழிவகுக்கின்றன.

ஊழல் மூலம் பெற்ற சலுகைகளுக்கும் கட்டுப்பாடு

ஊழல் நடவடிக்கைகளின் மூலம் பெறப்பட்ட பதவிகள், சலுகைகள், நன்மைகள் அல்லது ஏனைய இலாபங்கள், குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்படும் நாளிலிருந்து சட்டவிரோதமானவையாகக் கருதப்படுவதற்கான ஏற்பாடுகளும் சட்டத் திருத்தத்தில் முன்மொழியப்பட்டுள்ளன.

இதனிடையே, மாகாண அரச சேவையில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகளை நிரந்தரமாகவோ அல்லது தற்காலிகமாகவோ இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழுவில் இணைத்துக்கொள்வதற்கான ஏற்பாடுகளும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊழல் மற்றும் இலஞ்சம் தொடர்பான விசாரணைகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்தச் சட்டத் திருத்தங்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.