Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
உள்ளூர்

மழை, பலத்த காற்று: நுவரெலியா-சாமிமலையில் 9 குடும்பங்களைச் சேர்ந்த 43 பேர் பாதிப்பு

10 Aug 2026, 11:29 AM
பார்வைகள்: 142
மழை, பலத்த காற்று: நுவரெலியா-சாமிமலையில் 9 குடும்பங்களைச் சேர்ந்த 43 பேர் பாதிப்பு

சாமிமலை, ஸ்டொக்ஹோம் தோட்டத்தில் அண்மைக்காலமாக பெய்துவரும் அடைமழை மற்றும் பலத்த காற்றினால் 9 குடும்பங்களைச் சேர்ந்த 43 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த லயன் குடியிருப்பில் உள்ள சில வீடுகளுக்கு அருகாமையில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதுடன், பலத்த காற்றினால் பல வீடுகளின் கூரைத் தகரங்கள் சேதமடைந்துள்ளன.

இதனால், சேதமடைந்த கூரைகள் ஊடாக மழைநீர் வீடுகளுக்குள் கசிந்து வருவதாகவும், சிறுவர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களுடன் பாதுகாப்பற்ற சூழலில் வசிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த குடியிருப்பில் வசிக்கும் 13 பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளும் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். அத்துடன், தோட்டத் தொழிலாளர்களும் தொடர்ச்சியாக பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

வீடுகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பில் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியம் மற்றும் தோட்ட நிர்வாகத்திடம் பலமுறை அறிவித்த போதிலும், இதுவரை நிரந்தரத் தீர்வு வழங்கப்படவில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

எனவே, சேதமடைந்த கூரைத் தகரங்களை உடனடியாக மாற்றி புதிய கூரைத் தகரங்களை வழங்குவதுடன், மண்சரிவு ஏற்பட்ட பகுதிகளை உரிய முறையில் ஆய்வு செய்து, மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை, கடந்த பல வருடங்களாக ஸ்டொக்ஹோம் தோட்ட நிர்வாகம் மற்றும் சில அதிகாரிகளினால் தொழிலாளர்கள் மத்தியில் பாகுபாடு ஏற்படுத்தப்படுவதாகவும் மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

தோட்டத்தில் தற்போது தொழில் புரிபவர்கள், தொழில் வாய்ப்பின்றி இருப்பவர்கள் என தொழிலாளர்கள் பிரிக்கப்பட்டுள்ளதாகவும், நிர்வாகத்திற்கு ஆதரவானவர்கள் மற்றும் ஆதரவற்றவர்கள் என தொழிலாளர்களிடையே பிரிவினை ஏற்படுத்தப்படுவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதன் காரணமாக சில தொழிலாளர்கள் தொழிலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் சிலர் பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இக்குற்றச்சாட்டுகள் தொடர்பில் தோட்ட நிர்வாகத்தின் தரப்பிலான பதில் இதுவரை கிடைக்கவில்லை.

இதனிடையே, அண்மைய சீரற்ற காலநிலையால் வீடுகளின் கூரைத் தகரங்கள் சேதமடைந்த நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பங்கள் புதிய கூரைத் தகரங்களை வழங்குமாறு தோட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எனினும், தற்போது தோட்டத்தில் தொழில் புரியும் குடும்பங்களுக்கு தலா 8 பழைய கூரைத் தகரங்கள் வழங்கப்பட்டதாகவும், தொழிலில் இருந்து ஓய்வு பெற்ற குடும்பங்களுக்கு கூரைத் தகரங்களை வழங்க முடியாது என நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர்.