Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
உள்ளூர்

ஆயித்தியமலையில் 14 வயது சிறுமி மாயம்; பொலிஸ் நடவடிக்கை குறித்து பெற்றோர் குற்றச்சாட்டு

12 Aug 2026, 10:32 AM
பார்வைகள்: 116
ஆயித்தியமலையில் 14 வயது சிறுமி மாயம்; பொலிஸ் நடவடிக்கை குறித்து பெற்றோர் குற்றச்சாட்டு

மட்டக்களப்பு, ஆயித்தியமலை பகுதியில் தனியார் கல்வி நிலையத்துக்குச் செல்வதாகக் கூறி வீட்டிலிருந்து சென்ற 14 வயது சிறுமி ஒருவர் கடந்த 2ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

ஆயித்தியமலையைச் சேர்ந்த அல்போன்ஸ் ஜெசிக்கா (14) என்ற சிறுமியே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவ தினத்தன்று வழமைபோன்று பாடசாலைக்குச் சென்ற சிறுமி, பிற்பகல் 2 மணியளவில் தனியார் கல்வி நிலையத்துக்குச் செல்வதாகக் கூறி வீட்டிலிருந்து புறப்பட்டுள்ளார்.

எனினும், மாலை 6 மணியாகியும் சிறுமி வீடு திரும்பாததால், பெற்றோர் 119 அவசர காவல்துறை இலக்கத்திற்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து மறுநாள் ஆயித்தியமலை காவல் நிலையத்திற்குச் சென்று முறைப்பாடு பதிவு செய்ததாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், முறைப்பாடு பதிவு செய்யப்பட்டு பல நாட்கள் கடந்துள்ள போதிலும், தமது மகளை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகள் உரிய முறையில் முன்னெடுக்கப்படவில்லை என பெற்றோர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

சிறுமி காணாமல் போனமை தொடர்பில் மட்டக்களப்பிலுள்ள மனித உரிமைகள் நிலையத்திற்கும் தகவல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணாமல் போன சிறுமி தொடர்பில் தகவல்கள் தெரிந்தவர்கள் அருகிலுள்ள காவல் நிலையத்திற்கோ அல்லது சிறுமியின் குடும்பத்தினருக்கோ தகவல் வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.