Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
உள்ளூர்

அபுதாபியில் உயிரிழந்த இலங்கை இளைஞரின் சடலம் பிரதமரின் தலையீட்டில் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டது

12 Aug 2026, 10:50 AM
பார்வைகள்: 166
அபுதாபியில் உயிரிழந்த இலங்கை இளைஞரின் சடலம் பிரதமரின் தலையீட்டில் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டது

அபுதாபியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்த இலங்கை இளைஞர் ஒருவரின் சடலம், பிரதமர் ஹரிணி அமரசூரியவின் தலையீட்டின் பின்னர் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

கம்பளை – அத்கால பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய சாமிக இஷான் லியனகே என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அவரது இறுதிக் கிரியைகள் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளன.

சுமார் இரண்டு வருடங்களும் 10 மாதங்களும் முன்னர் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக அபுதாபி சென்றிருந்த அவர், கடந்த ஜூலை 15ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல் சம்பவமொன்றில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

உறவினர்களின் முயற்சிகள்

இளைஞரின் மரணம் தொடர்பில் அவரது மாமா, அவரை வெளிநாட்டுக்கு அனுப்பிய வேலைவாய்ப்பு முகவர் நிறுவனத்திடம் தகவல்களை கோரியுள்ளார். எனினும், ஒப்பந்தக் காலம் நிறைவடைந்துவிட்டதாகக் கூறி அந்த நிறுவனம் பொறுப்பிலிருந்து விலக முயன்றதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மற்றும் வெளிவிவகார அமைச்சிடம் சம்பவம் தொடர்பான தகவல்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

சிங்கப்பூரிலிருந்து உடனடியாக இலங்கை திரும்பிய உயிரிழந்த இளைஞரின் தாயாரும் உறவினர்களும் தேவையான சட்ட ஆவணங்களைத் தயாரித்து, அபுதாபியிலுள்ள நிறுவன அதிகாரிகளை தொடர்புகொள்ள முயன்ற போதிலும், அந்த முயற்சிகள் பலனளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், நிர்க்கதிக்குள்ளான குடும்பத்தினர் பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு வாட்ஸ்அப் மூலம் தகவல் அனுப்பியுள்ளனர்.

இதனையடுத்து, பிரதமரின் பணிப்புரையின் பேரில் பிரதமர் செயலகம் தலையீடு செய்து, சடலத்தை இலங்கைக்கு கொண்டு வரும் நடவடிக்கைகளை துரிதப்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரதமர் மற்றும் அமைச்சின் தலையீட்டின் மூலம் கடந்த ஜூலை 29ஆம் திகதி இளைஞரின் சடலம் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டது.

பின்னர், கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் மற்றும் நீர்கொழும்பு வைத்தியசாலை ஊடாக சடலம் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

நீர்கொழும்பு நீதவானின் உத்தரவின் பேரில் இடம்பெற்ற மரணப் பரிசோதனையில், தலையில் ஏற்பட்ட பலத்த தாக்கத்தினால் ஏற்பட்ட இரத்தக் கசிவு மற்றும் உடலின் பல்வேறு பகுதிகளில் காணப்பட்ட காயங்களே மரணத்துக்குக் காரணம் என தெரியவந்துள்ளது.

இதேவேளை, சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இலங்கையர் ஒருவர் அபுதாபி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.