Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
உள்ளூர்

யாழ்ப்பாணம் – கீரிமலை பகுதியில் குவிக்கப்பட்டுள்ள குப்பைகளை உடனடியாக அகற்றுமாறு கவனயீர்ப்பு நடவடிக்கை

13 Aug 2026, 11:09 AM
பார்வைகள்: 151
யாழ்ப்பாணம் – கீரிமலை பகுதியில் குவிக்கப்பட்டுள்ள குப்பைகளை உடனடியாக அகற்றுமாறு கவனயீர்ப்பு நடவடிக்கை

யாழ்ப்பாணம் – கீரிமலை பகுதியில் குவிக்கப்பட்டுள்ள குப்பைகளை உடனடியாக அகற்றுமாறு கோரி, ஆடி அமாவாசை தினமான நேற்று (12) கவனயீர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

வலி. வடக்கு பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட கீரிமலை பகுதியில், சுண்ணக்கல் அகழ்வினால் உருவான பாரிய பள்ளங்களில் வலி. தெற்கு பிரதேச சபையினால் இலத்திரனியல் கழிவுகள், மருத்துவக் கழிவுகள் உள்ளிட்ட பல்வேறு வகையான கழிவுகள் கொட்டப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்தக் கழிவுகளை உடனடியாக அகற்றுமாறு வலி. வடக்கு பிரதேச சபையின் 34 உறுப்பினர்களில் 26 பேர் கையொப்பமிட்டு, வடமாகாண ஆளுநர், உள்ளூராட்சி ஆணையாளர், மாவட்ட செயலாளர், மத்திய சுற்றாடல் அதிகார சபை மற்றும் தெல்லிப்பழை பிரதேச செயலாளர் உள்ளிட்ட தரப்பினரிடம் கடந்த வாரம் முறையிட்டிருந்தனர்.

எனினும், இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிவித்து, குப்பைகள் கொட்டப்பட்டுள்ள பகுதியில் நேற்று கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, குப்பைக் குவியல்களால் ஏற்படக்கூடிய சுற்றுச்சூழல் மற்றும் சமூகப் பாதிப்புகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. விழிப்புணர்வு பதாகைகள் காட்சிப்படுத்தப்பட்டதுடன், துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.

துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்கும் நடவடிக்கையில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் கலந்துகொண்டார்.

ஆடி அமாவாசை தினத்தில் முன்னோர்களுக்கான பிதிர்க்கடன்களை நிறைவேற்றுவதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பெருமளவான மக்கள் கீரிமலைக்கு வருகை தரும் நிலையில், அப்பகுதியில் குப்பைகள் குவிக்கப்பட்டிருப்பது சுற்றுச்சூழலுக்கும் பொதுமக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என சுட்டிக்காட்டப்பட்டது.

புகைப்பட தொகுப்பு (Gallery)