Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
உள்ளூர்

“நீதியின் ஓலம் 2” போராட்டம் இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது…

16 Aug 2026, 09:54 AM
பார்வைகள்: 120
“நீதியின் ஓலம் 2” போராட்டம் இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது…

கடந்த காலங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் படுகொலைகள், காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு நீதி மற்றும் பொறுப்புக்கூறலை வலியுறுத்தி முன்னெடுக்கப்படும் “நீதியின் ஓலம் – 2” போராட்டம் இரண்டாவது நாளாகவும் செம்மணி பகுதியில் தொடர்கிறது.

போராட்டத்தின் போது செம்மணி உள்ளிட்ட தமிழர் தாயகப் பகுதிகளில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பல்வேறு படுகொலைச் சம்பவங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களை நினைவுகூரும் வகையில் பல்வேறு காட்சிப்படுத்தல்கள் இடம்பெற்றன.

கடந்த காலங்களில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்த போராட்டக்காரர்கள், அவர்களுக்கான நீதி இதுவரை முழுமையாக கிடைக்கவில்லை எனத் தெரிவித்து தமது வேதனையையும் வெளிப்படுத்தினர்.

இந்நிலையில், போராட்டத்தின் அடுத்தகட்டமாக நாளை மறுதினம் 17ஆம் திகதி யாழ்ப்பாணம் பொது நூலகத்திலிருந்து பேரணி ஆரம்பிக்கப்பட்டு, ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகம் வரை சென்று மனு கையளிக்கப்படவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழர் தாயகப் பகுதிகளில் இடம்பெற்றதாகக் கூறப்படும் படுகொலைகள், காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விவகாரங்கள் மற்றும் நீண்டகாலமாகத் தீர்வு காணப்படாத மனித உரிமை மீறல்கள் தொடர்பில் உள்நாட்டு பொறிமுறைகளுக்கு அப்பால் சுயாதீனமான சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதே போராட்டத்தின் பிரதான கோரிக்கையாக முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த நீதிக்கான பயணம் எந்தவொரு தனிநபருக்கோ அல்லது அமைப்புக்கோ மாத்திரம் உரித்தானதல்ல என வலியுறுத்தியுள்ள ஏற்பாட்டாளர்கள், தமிழ் அரசியல் கட்சிகள், சிவில் சமூக அமைப்புகள், மதத் தலைவர்கள், தொழிற்சங்கங்கள், மாணவர் அமைப்புகள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் வேறுபாடுகளை கடந்து ஒன்றிணைந்து பங்கேற்குமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.

“நீதிக்கான ஓலம்” என்பது கடந்த காலத்தை நினைவுகூரும் நிகழ்வாக மட்டுப்படுத்தப்படாமல், உண்மையை வெளிக்கொண்டு வந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கச் செய்வதற்கான தொடர்ச்சியான குரலாக அமைய வேண்டும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் குடும்பங்கள் மற்றும் படுகொலைகளால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் ஒன்றிணைந்து, சர்வதேச விசாரணை, உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறலை வலியுறுத்தும் இந்தப் பயணத்தில் அனைத்து தரப்பினரும் பங்கேற்க வேண்டும் எனவும் அவர்கள் மேலும் அழைப்பு விடுத்துள்ளனர்.