Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
உள்ளூர்

திருமலை – குமாரபுரம் படுகொலை வழக்கு மீண்டும் விசாரணைக்கு

18 Aug 2026, 10:37 AM
பார்வைகள்: 379
திருமலை – குமாரபுரம் படுகொலை வழக்கு மீண்டும் விசாரணைக்கு

திருகோணமலை, கிளிவெட்டி – குமாரபுரம் பகுதியில் 1996ஆம் ஆண்டு தமிழ் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டிருந்த முன்னாள் இராணுவச் சிப்பாய்கள் ஆறு பேரையும் விடுதலை செய்து அநுராதபுரம் மேல் நீதிமன்றம் 2016ஆம் ஆண்டு வழங்கிய தீர்ப்பையும் மேன்முறையீட்டு நீதிமன்றம் இரத்து செய்துள்ளது.

24 தமிழ் பொதுமக்களை படுகொலை செய்தமை, மேலும் 25 பேரைக் காயப்படுத்தியமை உள்ளிட்ட 101 குற்றச்சாட்டுகள் குறித்த ஆறு முன்னாள் இராணுவச் சிப்பாய்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்டிருந்தன.

எனினும், வழக்கை விசாரித்த அநுராதபுரம் மேல் நீதிமன்றம் 2016ஆம் ஆண்டு சந்தேகநபர்கள் அனைவரையும் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவித்து தீர்ப்பளித்திருந்தது.

இந்தத் தீர்ப்பை இரத்து செய்து மீண்டும் விசாரணை நடத்துமாறு சட்டமா அதிபர் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், தற்போது குறித்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. மேலும், இந்த உத்தரவை உடனடியாக அநுராதபுரம் மேல் நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறும் பணிக்கப்பட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான அமல் ரணராஜா மற்றும் சுமுது பிரேமச்சந்திர ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் ஆயமே இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது. இரு நீதியரசர்களும் தனித்தனியாக தீர்ப்புரைகளை வழங்கியுள்ளனர்.

சந்தேகநபர்களை அடையாளம் காணும் அணிவகுப்பின்போது பதிவு செய்யப்பட்ட சில ஆவணங்களை சாட்சியங்களாக குறியீடு செய்ய அரசுத் தரப்புக்கு மேல் நீதிமன்ற நீதிபதி அனுமதி வழங்காதமை தவறானது என்ற மேலதிக மன்றாடியார் நாயகம் சுதர்ஷன டி சில்வாவின் வாதத்தையும் மேன்முறையீட்டு நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.

நீதியரசர் அமல் ரணராஜா தனது தீர்ப்பில், அடையாள அணிவகுப்பு தொடர்பான ஆவணங்களில் உத்தியோகபூர்வ கையொப்பம் இல்லை என்ற காரணத்தால் அவற்றை சாட்சியங்களாக ஏற்க மறுத்தமை தொழில்நுட்ப ரீதியான தவறு எனக் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, நீதியரசர் சுமுது பிரேமச்சந்திர, குறித்த ஆவணங்களில் உத்தியோகபூர்வ கையொப்பம் மற்றும் திகதி இல்லாததை மட்டும் அடிப்படையாகக் கொண்டு அவற்றை நிராகரித்தமை ஏற்றுக்கொள்ள முடியாதது என தெரிவித்துள்ளார்.

அந்தச் சாட்சியம் சட்டரீதியாக ஏற்றுக்கொள்ளக்கூடியதா என்பதையும், ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னர் அதனை எவ்வாறு மதிப்பிடுவது என்பதையுமே நீதிபதி கவனத்தில் கொண்டிருக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

1996ஆம் ஆண்டு பெப்ரவரி 11ஆம் திகதி குமாரபுரம் பகுதியில் இந்தப் படுகொலைச் சம்பவம் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.