Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
உள்ளூர்

கொழும்பில் முருகன் ஆலய நகைகள் கொள்ளை – தலைமை அர்ச்சகருக்கு பயணத் தடை

18 Aug 2026, 10:45 AM
பார்வைகள்: 384
கொழும்பில் முருகன் ஆலய நகைகள் கொள்ளை – தலைமை அர்ச்சகருக்கு பயணத் தடை

கொழும்பு 02, கொம்பனி வீதியில் அமைந்துள்ள முருகன் ஆலயத்துக்குச் சொந்தமான பெறுமதியான நகைகள் காணாமல் போன சம்பவம் தொடர்பில், ஆலயத்தின் பிரதம குருவுக்கு வெளிநாட்டுப் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த நகைகளின் பெறுமதி சுமார் ரூ.267,000 இலட்சம் என தெரிவிக்கப்படும் நிலையில், அவற்றைத் திருடியதாகக் கூறப்படும் சந்தேகநபர் இதுவரை கைது செய்யப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கோட்டை நீதிமன்றம் பயணத் தடை உத்தரவு

சந்தேகநபருக்கு எதிராக கோட்டை நீதவான் நீதிமன்றம் வெளிநாட்டுப் பயணத் தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர் தற்போது தலைமறைவாகியுள்ளதாகவும், அவரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

ஆலய நகைகளை அடகு வைத்து காணி கொள்வனவு?

ஆலயத்துக்குச் சொந்தமான நகைகளை அடகு வைத்து பெற்றுக்கொண்ட பணத்தைப் பயன்படுத்தி, கொட்டாஞ்சேனை புதிய செட்டியார் வீதியில் காணியொன்றை கொள்வனவு செய்துள்ளதாக சந்தேகநபர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

காணாமல் போன ஆலய நகைகளை மீட்பதுடன், அவற்றை அடகு வைத்து பெற்ற பணத்தின் மூலம் கொள்வனவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் சொத்துக்கள் தொடர்பிலும் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும், தலைமறைவாகியுள்ள சந்தேகநபரைக் கைது செய்வதற்கான மேலதிக நடவடிக்கைகளையும் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.