Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
உள்ளூர்

கையகப்படுத்தப்பட்டுள்ள தமிழர் தாயக காணிகளை மீட்க 7 மாவட்ட மக்கள் ஒன்றிணைவு

29 Aug 2026, 11:47 AM
பார்வைகள்: 90
கையகப்படுத்தப்பட்டுள்ள தமிழர் தாயக காணிகளை மீட்க 7 மாவட்ட மக்கள் ஒன்றிணைவு

இராணுவம் மற்றும் இதர திணைக்களங்களினால் அபகரிக்கப்பட்ட காணி உரிமைப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வை வலியுறுத்தி 7 மாவட்ட பிரதிநிதிகளின் பங்குபற்றுதலுடன் கூட்டுக் கலந்துரையாடல் ஒன்று இன்று (28) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

உயர் பாதுகாப்பு வலயம் என்ற போர்வையிலும், வனவள மற்றும் தொல்பொருள் திணைக்களங்களின் நடவடிக்கைகள் ஊடாகவும் தமது பூர்வீக காணிகளை இழந்துள்ள வடக்கு-கிழக்கு மக்கள், தமது காணிகளை மீட்கும் நோக்கில் ஒன்றிணைந்து செயற்படுவதற்கான முக்கியமான கூட்டுக் கலந்துரையாடலாக இது இடம்பெற்றது.

காணிகளை இழந்த மக்களின் குரலாகவும், அவர்களின் உரிமைகளுக்கான பொதுவான அமைப்பாகவும் செயற்படும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள “ஒன்றுபட்ட அமைப்பு” ஊடாக இந்தக் கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டது.

வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களையும், கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களையும் உள்ளடக்கிய ஏழு மாவட்டங்களைச் சேர்ந்த காணி உரிமையாளர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் இதில் பங்கேற்றனர்.

காணி அபகரிப்பு, காணிகளுக்குள் மக்கள் மீள்குடியேறுவதற்கான தடைகள், வனவள மற்றும் தொல்பொருள் திணைக்களங்களின் பெயரில் பொதுமக்களின் பாரம்பரிய காணிகள் ஆக்கிரமிக்கப்படுதல், உயர் பாதுகாப்பு வலயங்களாக அறிவிக்கப்பட்ட பகுதிகளில் காணிகளை இழந்த மக்களின் நிலை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் பிரதிநிதிகள் விரிவாக ஆராய்ந்தனர்.

போருக்குப் பின்னரான காலப்பகுதியில் தமது பூர்வீக நிலங்களை மீளப்பெறுவதற்காக மக்கள் பல்வேறு போராட்டங்களையும், சட்டரீதியான முயற்சிகளையும் முன்னெடுத்து வருகின்ற போதிலும், பல பகுதிகளில் இதுவரை நிரந்தரத் தீர்வு கிடைக்கவில்லை என்றும் கலந்துரையாடலில் சுட்டிக்காட்டப்பட்டது.

குறிப்பாக, பாதுகாப்பு தேவைகள் என்ற காரணத்தை முன்வைத்து நீண்டகாலமாக பொதுமக்களின் காணிகள் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், அந்தக் காணிகளில் ஒரு பகுதி விடுவிக்கப்பட்டிருந்தாலும், இன்னும் பல பகுதிகள் மக்கள் பயன்பாட்டுக்கு முழுமையாக வழங்கப்படாத நிலை தொடர்வதாகவும் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.