Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
உள்ளூர்

கிண்ணியாவில் தனியார் காணியிலிருந்து இரு மோட்டார் குண்டுகள் மீட்பு

31 Aug 2026, 09:56 AM
பார்வைகள்: 89
கிண்ணியாவில் தனியார் காணியிலிருந்து இரு மோட்டார் குண்டுகள் மீட்பு

கிண்ணியா, ஆகஸ்ட் 31: கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆலிம் வீதி, நோவா மைதானப் பகுதியில் அமைந்துள்ள தனியார் காணியிலிருந்து இரு மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த காணியில் வீடொன்றை நிர்மாணிப்பதற்காக அத்திவாரப் பணிகளுக்காக நிலத்தைத் தோண்டியபோது, சந்தேகத்திற்கிடமான நிலையில் காணப்பட்ட இரு மோட்டார் குண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து, காணி உரிமையாளர் வழங்கிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்குச் சென்ற கிண்ணியா பொலிஸார், குண்டுகளை பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.

கிண்ணியா, ஆலிம் வீதியைச் சேர்ந்த முகம்மட் ராபிக் முகம்மட் ரிபாஸ் என்பவருக்குச் சொந்தமான காணியிலேயே குறித்த மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

மீட்கப்பட்ட குண்டுகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக இன்று (31) நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.