Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
உள்ளூர்

ஹோர்ட்டன் சமவெளிக்கு சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் – இணையவழி முன்பதிவு அறிமுகம்

01 Sep 2026, 12:44 PM
பார்வைகள்: 78
ஹோர்ட்டன் சமவெளிக்கு சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் – இணையவழி முன்பதிவு அறிமுகம்

கொழும்பு: உலகப் புகழ்பெற்ற ஹோர்ட்டன் சமவெளி தேசியப் பூங்காவின் நுட்பமான சூழலியல் அமைப்பைப் பாதுகாக்கும் நோக்கில், சுற்றுலாப் பயணிகளின் வருகைக்கு நாளாந்த கட்டுப்பாடுகளை விதிப்பதுடன், இணையவழி முன்பதிவு முறையையும் அறிமுகப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

சுற்றாடல் பிரதி அமைச்சர் அன்டன் ஜெயக்கொடி தலைமையில் கடந்த ஆகஸ்ட் 29ஆம் திகதி ஹோர்ட்டன் சமவெளியில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின்போதே இந்தத் தீர்மானங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, குறிப்பிட்ட நேரத்திற்கான இணையவழி முன்பதிவு முறையை நடைமுறைப்படுத்துவதன் மூலம், எந்தவொரு நேரத்திலும் தேசியப் பூங்காவிற்குள் காணப்படும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், அதிகளவான சுற்றுலாப் பயணிகள் ஒரே நேரத்தில் பூங்காவிற்குள் திரள்வதைத் தடுக்கும் வகையில் புதிய கட்டண முறையொன்றை அறிமுகப்படுத்துவது குறித்தும் பரிசீலிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் சுற்றுச்சூழலுக்கு பொறுப்பான உயர்தர சூழல் சுற்றுலாவை ஊக்குவிப்பதுடன், ஹோர்ட்டன் சமவெளியின் இயற்கை வளங்களையும் பாதுகாக்க முடியும் என அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.

யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டுள்ள ஹோர்ட்டன் சமவெளி, தனித்துவமான உயிர்பல்வகைமை மற்றும் நுட்பமான மலைக்காட்டு சூழலியல் அமைப்புக்காக சர்வதேச முக்கியத்துவம் பெற்ற பகுதியாக விளங்குகிறது.

நீண்டகால சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்வதுடன், நிலையான சூழல் சுற்றுலா மாதிரியொன்றை உருவாக்குவதே இந்த நடவடிக்கைகளின் பிரதான நோக்கம் என கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

குறித்த கலந்துரையாடலில் சுற்றாடல் அமைச்சின் செயலாளர் கே.ஆர். உடுவாவல உள்ளிட்ட அமைச்சின் அதிகாரிகள், வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் வனப் பாதுகாப்புத் திணைக்களத்தின் மூத்த அதிகாரிகள் கலந்துகொண்டனர்.