Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
உள்ளூர்

எல்-நினோ தாக்கம்: வேலைவாய்ப்பை இழக்கும் அபாயத்தில் உள்ளோருக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை

03 Sep 2026, 11:29 AM
பார்வைகள்: 167
எல்-நினோ தாக்கம்: வேலைவாய்ப்பை இழக்கும் அபாயத்தில் உள்ளோருக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை

எல்-நினோ காலநிலை தாக்கத்தை எதிர்கொள்வதற்குத் தேவையான நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட விசேட அமைச்சரவை உபகுழு மற்றும் அதிகாரிகள் குழுவின் நான்காவது கூட்டம் அண்மையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக படபெந்தி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், எல்-நினோ தாக்கம் காரணமாக வேலைவாய்ப்புகளை இழக்கும் அபாயத்தில் உள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டது.

அத்துடன், எல்-நினோ காலநிலையால் மரக்கறி மற்றும் பழச்செய்கைகளுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைப்பது குறித்தும், நாட்டில் மரக்கறித் தட்டுப்பாடு ஏற்படுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பிலும் ஆராயப்பட்டது.

தற்போதுவரை ஆறு மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் எல்-நினோ தாக்கத்திற்கு முகங்கொடுத்துள்ள நிலையில், அவர்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படாத வகையில் தடையற்ற நீர் விநியோகத்தை உறுதி செய்வதற்காக முன்னெடுக்கப்பட்டு வரும் வேலைத்திட்டங்களின் முன்னேற்றமும் இதன்போது மீளாய்வு செய்யப்பட்டது.

இதேவேளை, எதிர்வரும் செப்டெம்பர் 4ஆம் திகதி பெரும்போகத்தை ஆரம்பிப்பது தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும், எல்-நினோ தாக்கத்துக்கு உள்ளாகியுள்ள ஆறு மாவட்டங்களின் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்களுடன் ‘சூம்’ தொழில்நுட்பத்தின் ஊடாக கலந்துரையாடலை நடத்தவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

இதனையடுத்து, விசேட அமைச்சரவை உபகுழுவின் அடுத்த கூட்டத்தை செப்டெம்பர் 14ஆம் திகதி நடத்துவதற்கும் முடிவு செய்யப்பட்டுள்ளது.