Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
உள்ளூர்

போதைப்பொருள் வியாபாரியை விடுவிக்க பணம்,மனைவியை பாலியல் இலஞ்சம் கோரியதாக பொலிஸ் அதிகாரி இடைநீக்கம்

06 Sep 2026, 12:04 PM
பார்வைகள்: 127
போதைப்பொருள் வியாபாரியை விடுவிக்க பணம்,மனைவியை பாலியல் இலஞ்சம் கோரியதாக  பொலிஸ் அதிகாரி இடைநீக்கம்

திருகோணமலையில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் வியாபாரி ஒருவரை விடுவிப்பதற்காக பணம் மற்றும் அவரது மனைவியிடம் பாலியல் இலஞ்சம் கோரியதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட மட்டக்களப்பு – கல்குடா பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய பொலிஸ் உப பரிசோதகர் ஒருவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ஓட்டமாவடி பகுதியைச் சேர்ந்த குறித்த பொலிஸ் உத்தியோகத்தரை உடனடியாக பணி இடைநீக்கம் செய்யுமாறு பொலிஸ் தலைமையகம் உத்தரவிட்டுள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2021ஆம் ஆண்டு திருகோணமலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றியபோது, ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட வியாபாரி ஒருவரை விடுவிப்பதற்காக பெருந்தொகை பணத்தையும், அவரது மனைவியிடம் பாலியல் இலஞ்சத்தையும் கோரியதாக குறித்த அதிகாரி மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் வியாபாரி, திருகோணமலை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் முறைப்பாடு செய்திருந்த நிலையில், அதனடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.

விசாரணைகள் இடம்பெற்று வந்த காலப்பகுதியில் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் திருகோணமலையிலிருந்து வாழைச்சேனை, கந்தளாய் உள்ளிட்ட பொலிஸ் நிலையங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டதுடன், சில வாரங்களுக்கு முன்னர் கல்குடா பொலிஸ் நிலையத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில், பொலிஸ் தலைமையகத்தின் உத்தரவுக்கு அமைய அவர் தற்போது பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.