Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
உள்ளூர்

நல்லூர் கந்தன் ஆலயத்தில் கோலாகலமாக இடம்பெற்ற மாம்பழத் திருவிழா

07 Sep 2026, 12:44 PM
பார்வைகள்: 152
நல்லூர் கந்தன் ஆலயத்தில் கோலாகலமாக இடம்பெற்ற மாம்பழத் திருவிழா

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவப் பெருவிழா நடைபெற்று வரும் நிலையில், இன்று (07) மாம்பழத் திருவிழா பக்தி பரவசத்துடன் கோலாகலமாக இடம்பெற்றது.

வருடாந்த மகோற்சவத்தின் 22ஆம் நாளான இன்று நடைபெற்ற இத்திருவிழாவில், முருகப்பெருமானும் விநாயகப் பெருமானும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, ஆலயத்தின் வெளிவீதியில் ஒன்றாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள்காட்சி வழங்கினர்.

புராணங்களில் கூறப்படும் மாம்பழக் கதையை அடிப்படையாகக் கொண்ட தத்துவ நிகழ்வும் ஆலய முன்றலில் சிறப்பாக இடம்பெற்றது.

உலகைச் சுற்றி வருமாறு கூறப்பட்டபோது, முருகப்பெருமான் தனது மயில் வாகனத்தில் உலகைச் சுற்றி வரச் சென்றதாகவும், அதேவேளை விநாயகப் பெருமான் தனது தாய், தந்தையரான சிவபெருமானையும் பார்வதி தேவியையும் சுற்றி வணங்கி, ‘தாய் தந்தையே உலகம்’ என்ற தத்துவத்தை வெளிப்படுத்தியதாகவும் புராணங்களில் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, ஆலய பிரதம குருவினால் விநாயகப் பெருமானுக்கு மாம்பழம் வழங்கப்பட்டது.

மயில் வாகனத்தில் உலகை வலம் வந்த முருகப்பெருமான் மீண்டும் ஆலய முன்றலுக்கு திரும்பியபோது, தனது அண்ணனான விநாயகப் பெருமானின் கையில் மாம்பழம் இருப்பதைக் கண்டு கோபமுற்றதாகக் கூறப்படும் புராண நிகழ்வு பக்தர்கள் முன்னிலையில் தத்ரூபமாக நிகழ்த்திக் காட்டப்பட்டது.