Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
உள்ளூர்

அரச பல்கலைக்கழகங்களில் விரிவுரையாளர் பற்றாக்குறை....

14 Sep 2026, 11:41 AM
பார்வைகள்: 95
அரச பல்கலைக்கழகங்களில் விரிவுரையாளர் பற்றாக்குறை....

இலங்கையின் அரச பல்கலைக்கழகங்களில் விரிவுரையாளர்கள் உள்ளிட்ட கல்விசார் ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ள கடும் பற்றாக்குறையால், மாணவர்களைச் சேர்த்தல் மற்றும் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுத்தல் உள்ளிட்ட பல்வேறு செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, 2025ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கும் நடவடிக்கைகளிலும் பாதிப்பு ஏற்படக்கூடும் என கூட்டமைப்பின் உதவிச் செயலாளர் பேராசிரியர் அருண வன்னிநாயக்க தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த அவர், குறைந்த சம்பளம், அதிகரித்துள்ள வரிச்சுமை மற்றும் போதியளவு சலுகைகள் இல்லாமை போன்ற காரணங்களால் அரச பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் கல்வியாளர்கள் வெளிநாடுகளுக்கும் தனியார் பல்கலைக்கழகங்களுக்கும் செல்வதாக குறிப்பிட்டார்.

இதனால் ஓய்வுபெறும் அல்லது பணியிலிருந்து விலகும் விரிவுரையாளர்களின் வெற்றிடங்களை உரிய முறையில் நிரப்புவதில் பல்கலைக்கழகங்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், பல்கலைக்கழக கல்வியாளர்களின் அடிப்படை சம்பளத்தை குறைந்தது 50 சதவீதத்தால் அதிகரிப்பதுடன், வரிச்சுமையை குறைத்து, ஏனைய சலுகைகளையும் விரிவுபடுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

இந்தக் கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு கடந்த புதன்கிழமை ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்திலும் ஈடுபட்டிருந்தது.

இதேவேளை, புதிதாக 50 அரச பல்கலைக்கழகங்களை நிறுவுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ள நிலையில், முதலில் தற்போது இயங்கி வரும் 17 அரச பல்கலைக்கழகங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் எனவும் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

விரிவுரையாளர் நியமனங்கள் தொடர்பான இழுபறி நிலை தொடர்ந்து நீடித்தால், நாட்டின் அரச பல்கலைக்கழகக் கல்வி முறைமை கடுமையாகப் பாதிக்கப்படக்கூடும் என பேராசிரியர் அருண வன்னிநாயக்க எச்சரித்துள்ளார்.

குறிப்பாக, குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த உயர்கல்வி மாணவர்களே இதனால் அதிகளவில் பாதிக்கப்படக்கூடும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.