Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
உள்ளூர்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்: இரு மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு ஐ.நா. பிரதிநிதி அதிர்ச்சி

14 Sep 2026, 11:52 AM
பார்வைகள்: 132
தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்: இரு மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு ஐ.நா. பிரதிநிதி அதிர்ச்சி

கொழும்பு – தெஹிவளை பகுதியில் வீடொன்றின் மீது நடத்தப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலில் பாடசாலை மாணவர்கள் இருவர் உயிரிழந்த சம்பவத்திற்கு இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப் பிரதிநிதி மார்க்-ஆண்ட்ரே பிரான்ச் அதிர்ச்சி வெளியிட்டுள்ளார்.

தனது உத்தியோகபூர்வ X கணக்கில் பதிவொன்றை வெளியிட்டுள்ள அவர், எந்தவொரு குழந்தையும் இவ்வாறான வன்முறைக்கு ஒருபோதும் பலியாகக் கூடாது என தெரிவித்துள்ளார்.

இந்தக் கொடூரச் சம்பவத்திற்கு பொறுப்பானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு, தமது செயல்களுக்கு உரிய முறையில் பொறுப்புக்கூற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துள்ளதாக ஐ.நா. பிரதிநிதி குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, முச்சக்கரவண்டியில் வந்த நபர் ஒருவர் குறித்த வீட்டின் மீது கைக்குண்டுத் தாக்குதலை நடத்திவிட்டு தப்பிச் சென்ற சம்பவம் அங்கிருந்த CCTV கெமராக்களில் பதிவாகியுள்ளது.

இந்தத் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தையும் அவரது இரு மகன்களும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

எனினும், சிகிச்சை பலனின்றி இரு சிறுவர்களும் உயிரிழந்தனர். அவர்களது 55 வயதான தந்தை பலத்த காயங்களுடன் தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.