Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
உள்ளூர்

மயிலத்தமடு – மாதவனை பகுதியில் நிலைமை மோசமடைந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

15 Sep 2026, 12:21 PM
பார்வைகள்: 102
மயிலத்தமடு – மாதவனை பகுதியில் நிலைமை மோசமடைந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

பாரம்பரிய மேய்ச்சல் நிலங்களைப் பாதுகாக்கக் கோரி கால்நடைப் பண்ணையாளர்கள் 1,500 நாட்களுக்கும் மேலாக தொடர்ச்சியாக அமைதியான போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

பல ஆண்டுகளாகப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதுடன், தொடர்ச்சியாக ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களிடம் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டும், நாடாளுமன்றத்தில் இப்பிரச்சினை தொடர்பில் கேள்விகள் எழுப்பப்பட்டும், பல்வேறு சந்தர்ப்பங்களில் உறுதிமொழிகள் வழங்கப்பட்டும் இதுவரை நிரந்தரத் தீர்வு வழங்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாரம்பரியமாக கால்நடைகளின் மேய்ச்சலுக்குப் பயன்படுத்தப்பட்டு வந்த நிலங்கள் பெருமளவில் சேதப்படுத்தப்பட்டும் ஆக்கிரமிக்கப்பட்டும் வருவதால், தற்போது பரந்த நிலப்பரப்புகளில் கால்நடைகளுக்குத் தேவையான புற்கள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், தொடர்ச்சியாக நிலவும் மழையின்மை மற்றும் வறட்சியான காலநிலை காரணமாக நிலைமை மேலும் மோசமடைந்துள்ளதாகவும், கால்நடைப் பண்ணையாளர்கள் தமது கால்நடைகளுக்குப் போதுமான மேய்ச்சல் நிலங்களைப் பெற்றுக்கொள்ள முடியாமல் கடும் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதன் காரணமாக பண்ணையாளர்களின் வாழ்வாதாரமும், அவர்களின் வாழ்வாதாரத்தைத் தாங்கி நிற்கும் கால்நடைகளும் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் நிலங்கள் 1972ஆம் ஆண்டிலிருந்து மட்டுமே பயன்படுத்தப்பட்டவை அல்ல எனத் தெரிவித்த சாணக்கியன், பல தலைமுறைகளாக, சமூகத்தின் வரலாற்றுப் புரிதலின்படி பல நூற்றாண்டுகளாகவே விவசாயிகள் மற்றும் கால்நடைப் பண்ணையாளர்கள் குறித்த நிலங்களைப் பாரம்பரியமாகப் பயன்படுத்தி வந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, 1972ஆம் ஆண்டு முதல் இந்நிலங்கள் கால்நடை மேய்ச்சலுக்குப் பயன்படுத்தப்பட்டமைக்கான உத்தியோகபூர்வ ஆவணப் பதிவுகளும் காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றப் பதிவுகளிலும், 1972ஆம் ஆண்டு முதல் மட்டக்களப்பு மாவட்ட பால் உற்பத்தியாளர்களுக்காக மயிலத்தமடு கால்நடை மேய்ச்சல் நிலமாக ஒதுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் சாணக்கியன் கூறியுள்ளார்.

எனவே, 1972ஆம் ஆண்டு என்பது ஏற்கனவே நடைமுறையில் இருந்த பாரம்பரிய பயன்பாட்டை உத்தியோகபூர்வமாகப் பதிவு செய்த ஆண்டே தவிர, விவசாயிகள் குறித்த நிலங்களைப் பயன்படுத்த ஆரம்பித்த ஆண்டைக் குறிக்கவில்லை என அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், இப்பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ள சமூகத்தின் எண்ணிக்கை சில உத்தியோகபூர்வ பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணிக்கையை விட அதிகமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Centre for Policy Alternatives (CPA) நிறுவனம் 2023ஆம் ஆண்டு மேற்கொண்ட ஆய்வில், மாதவனை – மயிலத்தமடு பகுதியில் பதிவுசெய்யப்பட்ட மற்றும் பதிவுசெய்யப்படாத வகையில் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ள 1,072 குடும்பங்கள் இருப்பதாகப் பதிவு செய்துள்ளதாகவும் சாணக்கியன் குறிப்பிட்டுள்ளார்.