Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
உள்ளூர்

வைத்தியர் சுகுணன் தொடர்பில் சமூக ஊடகப் பதிவுகளுக்கு 6 பேருக்கு இடைக்காலத் தடை

30 Sep 2026, 12:03 PM
பார்வைகள்: 89
வைத்தியர் சுகுணன் தொடர்பில் சமூக ஊடகப் பதிவுகளுக்கு 6 பேருக்கு இடைக்காலத் தடை

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம் சுகுணன் மற்றும் அவரது குடும்பத்தினர் தொடர்பில் சமூக ஊடகங்களில் அவதூறான கருத்துகளைப் பதிவிட்டதாகக் கூறப்படும் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம். ஹரீஸ் உள்ளிட்ட ஆறு பேருக்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதன்படி, குறித்த ஆறு பேரும் வழக்கு விசாரணை நிறைவடையும் வரை வைத்தியர் சுகுணன் மற்றும் அவரது குடும்பத்தினர் தொடர்பில் சமூக ஊடகங்களில் பதிவுகள் அல்லது கருத்துகளை வெளியிடக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், வழக்கில் தொடர்புடைய ஆறு பேரையும் எதிர்வரும் ஒக்டோபர் 12ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த மாதம் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் சுகாதாரப் பணியாளர்களுக்கான நியமன விவகாரம் மற்றும் அவர்களின் உடை தொடர்பில் சர்ச்சை ஏற்பட்டிருந்தது.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் சுகுணன் மற்றும் அவரது குடும்பத்தினர் தொடர்பில் சமூக ஊடகங்களில் அவதூறான மற்றும் சட்டத்தால் தடைசெய்யப்பட்ட கருத்துகள் வெளியிடப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து, நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம். ஹரீஸ் உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிராக வைத்தியர் சுகுணன் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.

இவ்வழக்கின் விசாரணையின்போதே குறித்த இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.