Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
உள்ளூர்

யாழ். இந்துக் கல்லூரி அதிபர் தொடர்பான சமூக வலைத்தளப் பதிவு:மன்னிப்புக் கோர உத்தரவிட்ட நீதிமன்று

01 Oct 2026, 10:51 AM
பார்வைகள்: 104
யாழ். இந்துக் கல்லூரி அதிபர் தொடர்பான சமூக வலைத்தளப் பதிவு:மன்னிப்புக் கோர உத்தரவிட்ட நீதிமன்று

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் ரட்ணம் செந்தில்மாறனுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் உண்மைக்குப் புறம்பான தகவல்களை வெளியிட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், வி.ஜனகனுக்கு எதிராக நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இவ்வழக்கு தொடர்பான விசாரணை நேற்று (29) இடம்பெற்றபோது, நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவுக்கு அமைய தாம் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்த காணொளியை நீக்கிவிட்டதாக எதிர்மனுதாரரான ஜனகன் விநாயகமூர்த்தி நீதிமன்றில் தெரிவித்தார்.

முன்னதாக, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் பாடசாலை வளாகத்திலிருந்த சைவ சமய அடையாளங்களை அகற்றுவதாகவும், மத நம்பிக்கையற்றவர் என்றும், பாடசாலையின் பாரம்பரியத்தை நிராகரிப்பதாகவும் குற்றம்சாட்டி ஜனகன் விநாயகமூர்த்தி முகநூலில் காணொளியொன்றை பதிவிட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, குறித்த காணொளியை உடனடியாக நீக்குமாறும், அதிபரிடம் மன்னிப்புக் கோருமாறும், எதிர்காலத்தில் இதுபோன்ற காணொளிகளை வெளியிடமாட்டேன் என உறுதியளிக்குமாறும் யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் நீதிமன்றம் நிபந்தனைக் கட்டளை பிறப்பித்திருந்தது.

இந்நிலையில், 29.09.2026 அன்று நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது நீதிமன்றில் முன்னிலையான ஜனகன் விநாயகமூர்த்தி, நீதிமன்ற உத்தரவுக்கு அமைவாக குறித்த காணொளியை ஏற்கனவே நீக்கிவிட்டதாக தெரிவித்தார்.

அத்துடன், காரணங்காட்டுவதற்காக மேலதிக அவகாசம் கோரிய அவர், அதிபரிடம் மன்னிப்புக் கோருவது உள்ளிட்ட விடயங்களில் இரு தரப்பினரும் இணக்கமான தீர்வொன்றை எட்டுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய வேண்டும் என நீதிமன்றில் கோரிக்கை விடுத்தார்.

இரு தரப்பினரின் கோரிக்கைகளையும் பரிசீலித்த நீதிவான், சமரச முயற்சிகளுக்கான வாய்ப்புகளை ஆராயும் வகையில் வழக்கு விசாரணையை எதிர்வரும் ஒக்டோபர் 30ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

இவ்வழக்கில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் ரட்ணம் செந்தில்மாறன் சார்பில் மூத்த சட்டத்தரணிகளான வி.திருக்குமரன், கலாநிதி கு.குருபரன் உள்ளிட்ட மேலும் 12 சட்டத்தரணிகள் முன்னிலையாகினர்.

அதேவேளை, வி.ஜனகன் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான தயாசிறி ஜயசேகர மற்றும் சட்டத்தரணி என்.கே.அசோக்பரன் ஆகியோர் முன்னிலையாகினர்.