Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
உள்ளூர்

தமிழகத்தின் மண்டபம் முகாமில் உள்ள அகதிகள் குறித்து விசேட கவனம்!

02 Oct 2026, 10:43 AM
பார்வைகள்: 109
தமிழகத்தின் மண்டபம் முகாமில் உள்ள அகதிகள் குறித்து விசேட கவனம்!

தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் இலங்கைத் தமிழர் ஒருவர் மீது காலணி வீசப்பட்டதாக முன்வைக்கப்பட்ட முறைப்பாடு தற்போது பெரும் பேசுபொருளாகியுள்ளது.

இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் ஆய்வு மேற்கொள்வதற்காக இலங்கைத் தமிழர் மறுவாழ்வு ஆணையாளர் முகாமுக்கு நேரில் விஜயம் செய்துள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன்போது முகாமில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களைச் சந்தித்த ஆணையாளர், அவர்களின் குறைகள், தேவைகள் மற்றும் கோரிக்கைகளைக் கேட்டறிந்துள்ளார்.

மீண்டும் இலங்கை திரும்ப விருப்பம்

பொருளாதார நெருக்கடி காரணமாக தமிழ்நாட்டுக்கு இடம்பெயர்ந்த சில இலங்கைத் தமிழர்கள், மீண்டும் தாயகம் திரும்ப விருப்பம் தெரிவித்து ஆணையாளரிடம் மனுக்களையும் சமர்ப்பித்துள்ளனர்.

மேலும், ஆதார் அட்டை இல்லாத காரணத்தால் மாணவர்களைப் பாடசாலைகளில் சேர்ப்பதிலும், அரச மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுக்கொள்வதிலும் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குவதாக முகாமில் வசிப்பவர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கும் உரிய நடவடிக்கை எடுக்குமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காலணி வீச்சுச் சம்பவம் தொடர்பில் விசாரணை

இதேவேளை, இலங்கைத் தமிழர் ஒருவர் மீது காலணி வீசப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் மாவட்ட ஆட்சியரிடமிருந்து அறிக்கை பெறப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மறுவாழ்வு ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, முகாமில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடுகள் மற்றும் அரசாங்கத்தின் நலத்திட்டப் பணிகள் குறித்தும் அவர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளதாக தமிழக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.