Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
உள்ளூர்

மலையகத் தமிழர்களின் மனித உரிமைகள் பாதுகாப்பிற்கு தேசிய கொள்கை அவசியம் – மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தல்

18 Jun 2026, 02:28 PM
பார்வைகள்: 105
மலையகத் தமிழர்களின் மனித உரிமைகள் பாதுகாப்பிற்கு தேசிய கொள்கை அவசியம் – மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தல்

மலையகத் தமிழ் சமூகத்தின் அடிப்படை மனித உரிமைகளை பாதுகாப்பதும் மேம்படுத்துவதும் நோக்கில், ஒருங்கிணைந்த தேசிய கொள்கை கட்டமைப்பை உருவாக்க வேண்டிய அவசியத்தை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது. இதனை மையப்படுத்திய விசேட தேசிய கலந்துரையாடல் புதன்கிழமை (17) கொழும்பில் நடைபெற்றது.கொழும்பு மந்தாரினா ஹோட்டலில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், மலையக மக்களின் தற்போதைய வாழ்வாதார மற்றும் சமூக சவால்கள் குறித்து ஆணைக்குழு மேற்கொண்ட களப்பணி ஆய்வின் விரிவான அறிக்கையும் பரிந்துரைகளும் அதிகாரப்பூர்வமாக சமர்ப்பிக்கப்பட்டன.

ஆய்வின் முக்கிய அம்சங்களை சட்டத்தரணி பாலசந்திரன் கௌதமன் மற்றும் எஸ். பிரபாகரன் ஆகியோர் முன்வைத்தனர். கல்வி, தொழிலாளர் உரிமைகள், வறுமை ஒழிப்பு, மொழி உரிமைகள் மற்றும் அரச சேவைகளுக்கு அணுகல் ஆகிய ஐந்து முக்கிய துறைகள் தொடர்பில் அவர்கள் பரிந்துரைகளை விளக்கினர்.

மேலும், நில உரிமை மற்றும் வீட்டு உரிமை தொடர்பான கொள்கை தலையீடுகள், அரச சேவைகள், சுகாதாரம் மற்றும் பொருளாதார நலன் மேம்பாடு உள்ளிட்ட விடயங்கள் குறித்த அமர்வுகள் ஆணைக்குழு ஆணையாளர்கள் நிமால் ஜி. புஞ்சிஹேவா மற்றும் கலாநிதி ஜெஹான் குணதிலக்க ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றன. தொழிலாளர் உரிமைகள், வேலை நிலைமைகள் மற்றும் கல்வி சமத்துவம் தொடர்பான கலந்துரையாடல்களும் தனித்தனியாக நடத்தப்பட்டன.கலந்துரையாடல்களில் கல்வியியலாளர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் முன்னாள் அரசியல் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு தங்களது கருத்துகளையும் பரிந்துரைகளையும் முன்வைத்தனர்.