Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
உள்ளூர்

காவி உடை அகற்றப்பட்ட நிலையில் ஞானசார தேரர் இன்று நீதிமன்றில் முன்னிலை

06 Oct 2026, 09:46 AM
பார்வைகள்: 95
காவி உடை அகற்றப்பட்ட நிலையில் ஞானசார தேரர் இன்று நீதிமன்றில் முன்னிலை

சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கலகொடஅத்தே ஞானசார தேரர், மேல் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள மற்றொரு வழக்கு தொடர்பில் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

இதன்போது, ஞானசார தேரரின் காவி உடை அகற்றப்பட்டு, சிறைக் கைதிகளுக்கான சீருடை அணிவிக்கப்பட்ட நிலையில் அவர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறைக் கைதிகளுக்கான சீருடை நேற்று முதல் ஞானசார தேரருக்கு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளரும் சிறைச்சாலை ஆணையருமான சேனக பல்லேவத்த தெரிவித்துள்ளார்.

தற்போது ஞானசார தேரரின் காவி உடை அகற்றப்பட்டு, சிறைச்சாலை விதிமுறைகளுக்கு அமைவான ஆடை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஞானசார தேரர் தற்போது சாதாரண கைதிகள் தடுத்து வைக்கப்படும் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையர் தெரிவித்துள்ளார்.

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்ட ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையின் எஞ்சிய ஆறு வருட காலத்தை அனுபவிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

இதனையடுத்து, அவர் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.