Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
உள்ளூர்

அம்பாறையில் அதிகரிக்கும் காட்டு யானைகளின் அச்சுறுத்தல்: சிறுவன் மீது தாக்குதல்

08 Oct 2026, 12:20 PM
பார்வைகள்: 155
அம்பாறையில்  அதிகரிக்கும் காட்டு யானைகளின் அச்சுறுத்தல்: சிறுவன் மீது தாக்குதல்

அம்பாறை மாவட்டம், நாவிதன்வெளி மற்றும் அதனை அண்டிய நற்பிட்டிமுனை, கிட்டங்கி பகுதிகளில் காட்டு யானைகளின் ஊடுருவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த சில தினங்களாக நாவிதன்வெளி பிரதேச செயலகத்திற்கு அண்மித்த பகுதிக்குள் நள்ளிரவு நேரத்தில் புகுந்த காட்டு யானையொன்று, செல்வா மைதானத்தின் வேலிகளை அடித்து சேதப்படுத்தியுள்ளது.

இதனால் அச்சமடைந்த கிராம மக்கள் ஒன்றுகூடி, பல்வேறு முயற்சிகளின் பின்னர் குறித்த யானையை காட்டுப்பகுதியை நோக்கி விரட்டியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து நற்பிட்டிமுனை – கிட்டங்கி பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் அதிகாலை வேளையில் வீதியைக் கடக்க முயன்ற அந்த யானை, நற்பிட்டிமுனை சேனைக்குடியிருப்பு பகுதியில் இருந்து மத்திய முகாம் நோக்கி துவிச்சக்கர வண்டியில் தோட்டப் பணிக்காகச் சென்ற சிறுவன் மீது எதிர்பாராதவிதமாக தாக்குதல் நடத்தியுள்ளது.

யானையின் தாக்குதலில் காயமடைந்த சிறுவன் உடனடியாக மீட்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் கல்முனை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை, குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த மற்றொரு காட்டு யானையை வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் துரிதமாக செயற்பட்டு, எவ்வித அசம்பாவிதமும் ஏற்படாத வகையில் பாதுகாப்பாக மீண்டும் காட்டுப்பகுதிக்குள் விரட்டியுள்ளனர்.

அதிகாரிகளின் இந்த உடனடி நடவடிக்கை காரணமாக அப்பகுதி மக்கள் தற்காலிக நிம்மதி அடைந்துள்ளனர்.

இதனிடையே, அறுவடைப் பருவம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து வயல் நிலங்களில் எஞ்சியுள்ள வைக்கோலுக்கு தீ வைக்கும் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளமை தொடர்பிலும் சூழலியலாளர்களும் விவசாய நிபுணர்களும் கவலை வெளியிட்டுள்ளனர்.

வைக்கோல் எரிக்கப்படுவதால் காற்று மாசுபடுவதுடன், மண்ணில் காணப்படும் நன்மை பயக்கும் நுண்ணுயிரிகள் அழிந்து, மண் வளம் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாகவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

மேலும், புகை மாசுபாடு மற்றும் காட்டுப்பகுதிகளில் ஏற்படும் உணவுத் தட்டுப்பாடு உள்ளிட்ட காரணங்களால் யானைகள் குடியிருப்புப் பகுதிகளை நோக்கி வருவதற்கான சாத்தியம் அதிகரிப்பதாகவும், இதன் காரணமாக மனித – யானை மோதல்கள் தீவிரமடைந்து வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக அதிகரித்து வரும் காட்டு யானைகளின் அச்சுறுத்தலால் பொதுமக்களின் உயிர்களும் உடமைகளும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ள நிலையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு யானை வேலிகளை அமைப்பதுடன், மனித – யானை மோதலைக் கட்டுப்படுத்த நிரந்தரத் தீர்வை பெற்றுத்தர வேண்டும் என கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.