Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
உள்ளூர்

14 வயது சிறுவனைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியை: 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு!

10 Oct 2026, 10:28 AM
பார்வைகள்: 111
14 வயது சிறுவனைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியை: 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு!

14 வயது பாடசாலை மாணவனைப் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட 49 வயதுடைய ஆசிரியை ஒருவருக்கு, மொனராகலை மேல் நீதிமன்றம் 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

மொனராகலை மேல் நீதிமன்ற நீதிபதி சினிக் விஜேசேகர இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளார்.

குறித்த ஆசிரியை மீதான மூன்று குற்றச்சாட்டுகளுக்கும் தலா 8 ஆண்டுகள் வீதம் மொத்தமாக 24 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. எனினும், அந்தத் தண்டனைகளை ஒரே நேரத்தில் அனுபவிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டதால், அவர் 8 ஆண்டுகள் சிறைத்தண்டனையை அனுபவிக்க வேண்டியுள்ளது.

மேலும், குற்றவாளிக்கு 50,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதுடன், பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு மூன்று குற்றச்சாட்டுகளுக்கும் தலா 250,000 ரூபாய் வீதம் மொத்தமாக 750,000 ரூபாய் நஷ்டஈடு வழங்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நஷ்டஈட்டுத் தொகையைச் செலுத்தத் தவறினால் மேலதிகமாக ஒரு வருட சிறைத்தண்டனையும், அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால் மேலும் ஒரு வருட இலகு சிறைத்தண்டனையும் அனுபவிக்க வேண்டும் எனத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2019ஆம் ஆண்டு இடம்பெற்ற சம்பவம்

ஹிதிகிபுல பிரதேசத்திலுள்ள பாடசாலையொன்றில் ஆசிரியையாகப் பணியாற்றிய, இரண்டு பிள்ளைகளின் தாயான குறித்த பெண், கடந்த 2019ஆம் ஆண்டு செப்டம்பர் 29ஆம் திகதி, 14 வயதுடைய பாடசாலை மாணவனைத் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்டது.

இது தொடர்பில், தண்டனைச் சட்டக்கோவையின் பல்வேறு பிரிவுகளின் கீழ், சட்டமா அதிபரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

38 பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிகை கடந்த 6ஆம் திகதி மேல் நீதிமன்றத்தில் வாசிக்கப்பட்டபோது, விசாரணை நடைபெற்றுக்கொண்டிருந்த நிலையில் குறித்த ஆசிரியை மயங்கி விழுந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் அவர் குணமடைந்ததைத் தொடர்ந்து, கடந்த 8ஆம் திகதி வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டது.

இந்த வழக்கில் அரச தரப்பு சார்பில் அரச சட்டவாதி மெனுர பெரேரா ஆஜராகி வாதங்களை முன்வைத்தார். பிரதிவாதி சார்பில் சட்டத்தரணி சுசந்த ரத்நாயக்க ஆஜராகியிருந்ததுடன், மொனராகலை பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் சார்ஜன்ட் பிரியதர்சன அரச தரப்புக்கு உதவிகளை வழங்கியிருந்தார்.