Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
உள்ளூர்

காரில் மீட்கப்பட்ட பெண்ணின் மரணம்: காதலன் மீது பொலிஸாரின் விசாரணை தீவிரம்

18 Jun 2026, 02:48 PM
பார்வைகள்: 121
காரில் மீட்கப்பட்ட பெண்ணின் மரணம்: காதலன் மீது பொலிஸாரின் விசாரணை தீவிரம்

தெல்தெனிய வைத்தியசாலைக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றில் இருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.வெலிகம பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆரம்பகட்ட விசாரணைகளில், குறித்த பெண் ஜூன் 3 முதல் ஜூன் 16 வரை நுவரெலியா பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்தமை தெரியவந்துள்ளது.

மேலும், உயிரிழந்த பெண்ணின் காதலன் என சந்தேகிக்கப்படும் நபரே இந்த சம்பவம் தொடர்பாக தெல்தெனிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.இதனிடையே, நுவரெலியாவில் உள்ள விடுதி ஒன்றிலிருந்து உயிரிழந்த பெண்ணை குறித்த நபர் தூக்கிச் செல்லும் காட்சிகள் அடங்கிய சிசிரிவி பதிவுகளும் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சடலம் தற்போது பிரேதப் பரிசோதனைக்காக தெல்தெனிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இது கொலையா அல்லது வேறு காரணத்தால் நிகழ்ந்த மரணமா என்பதை உறுதிப்படுத்த மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.சம்பவத்தின் உண்மை நிலையை கண்டறிவதற்காக நுவரெலியா மற்றும் தெல்தெனிய பொலிஸார் இணைந்து விசாரணைகளை தொடர்கின்றனர்.