Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
உள்ளூர்

விண்ணாங்கம்பிட்டி கிராமத்தை மீளக்குடியமர்த்த நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் எம்.பி. ரவிகரனிடம் கோரிக்கை!

13 Oct 2026, 09:49 AM
பார்வைகள்: 105
விண்ணாங்கம்பிட்டி கிராமத்தை மீளக்குடியமர்த்த நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் எம்.பி. ரவிகரனிடம் கோரிக்கை!

வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பட்டிக்குடியிருப்பு கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள தமிழ்மக்களின் பூர்வீக எல்லைக் கிராமங்களில் ஒன்றான விண்ணாங்கம்பிட்டி கிராமத்தை மீளக்குடியமர்த்த நடவடிக்கை எடுக்குமாறு அப்பகுதி மக்கள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனிடம் உருக்கமான கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

அப்பகுதி மக்களின் முறைப்பாட்டையடுத்து, கடந்த 11.10.2026 அன்று விண்ணாங்கம்பிட்டி கிராமத்துக்கு நேரில் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், அங்குள்ள நிலைமைகளை ஆராய்ந்ததுடன், மக்களின் கோரிக்கைகளையும் கேட்டறிந்துகொண்டார்.

இதன்போது, தமது பூர்வீக வாழ்விடங்களில் மீளக்குடியமர்வதற்கு வனவளத் திணைக்களம் தடையாக இருப்பதாகவும் மக்கள் அவரிடம் சுட்டிக்காட்டினர்.

இதற்குப் பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், விண்ணாங்கம்பிட்டி கிராமத்தை மீளக்குடியமர்த்துவது தொடர்பில் உரிய தரப்பினரின் கவனத்துக்குக் கொண்டுசென்று நடவடிக்கை எடுப்பதற்கு முயற்சிப்பதாகத் தெரிவித்தார்.

1984ஆம் ஆண்டு இடம்பெயர்ந்த மக்கள்

வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பட்டிக்குடியிருப்பு கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள விண்ணாங்கம்பிட்டி கிராமத்தில் பூர்வீகமாக வாழ்ந்த மக்கள், 1984ஆம் ஆண்டு காலப்பகுதியில் தமது சொந்த இடங்களிலிருந்து இடம்பெயர நேரிட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனிடம் தெரிவித்தனர்.

குறிப்பாக, 1984ஆம் ஆண்டு அயற்கிராமமான ஒதியமலையில் 32 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டமை மற்றும் பட்டிக்குடியிருப்பில் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட படுகொலைச் சம்பவங்களைத் தொடர்ந்து, விண்ணாங்கம்பிட்டியில் வாழ்ந்த தமிழ் குடும்பங்களும் தமது பூர்வீக வாழ்விடங்களிலிருந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டதாக மக்கள் சுட்டிக்காட்டினர்.

பல கிராமங்கள் மீள்குடியேற்றப்பட்டும் விண்ணாங்கம்பிட்டிக்கு தீர்வு இல்லை

ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்த பின்னர், வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பல கிராமங்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டபோதிலும், விண்ணாங்கம்பிட்டி கிராமம் இதுவரை மீள்குடியேற்றம் செய்யப்படாமல் இருப்பதாக மக்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், சில குடும்பங்கள் தமது பூர்வீகக் காணிகளில் மீண்டும் குடியேறி வசிக்க முயன்றபோது, வனவளத் திணைக்கள அதிகாரிகளால் அங்கிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டதாகவும் மக்கள் முறைப்பாடு செய்தனர்.

தமது பூர்வீக வாழ்விடங்களில் மீளக்குடியமர்த்துமாறு கிராம அலுவலர் மற்றும் வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் ஆகியோரிடம் பலமுறை கோரிக்கை விடுத்தபோதிலும், இதுவரை உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

உறவினர்களின் வீடுகளிலும் வாடகை வீடுகளிலும் வாழும் மக்கள்

விண்ணாங்கம்பிட்டி கிராமத்தில் மீள்குடியேற முடியாத நிலை காரணமாக, அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் தற்போது அயற்கிராமங்களில் உள்ள உறவினர்களின் வீடுகளிலும் வாடகை வீடுகளிலும் தங்கியிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனிடம் தெரிவித்தனர்.

இதனால், தமது பூர்வீக வாழ்விடங்களுக்குத் திரும்பி இயல்பான வாழ்க்கையை முன்னெடுக்க முடியாத நிலை தொடர்வதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

இதனையடுத்து, மக்களின் கோரிக்கைகளையும் குறைபாடுகளையும் கேட்டறிந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், அவர்களின் பூர்வீக வாழ்விடக் காணிகளையும் நேரில் பார்வையிட்டார்.

மீள்குடியேற்றம் தொடர்பில் உரிய தரப்பினரிடம் வலியுறுத்தப்படும்

இதன்போது கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், விண்ணாங்கம்பிட்டி கிராம மக்களின் பூர்வீக வாழ்விடக் காணிகளை வனவளத் திணைக்களம் தடுத்து வைத்துக்கொண்டு, மக்கள் அங்கு மீளக்குடியேறுவதைத் தடுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தெரிவித்தார்.

மேலும், இதுவரை மீள்குடியேற்றம் செய்யப்படாத விண்ணாங்கம்பிட்டி கிராமம் தொடர்பில் வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் மற்றும் வவுனியா மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட உரிய அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டுசெல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், இவ்விடயம் தொடர்பில் நாடாளுமன்றத்திலும் வலியுறுத்தப்படுமெனத் தெரிவித்த அவர், விண்ணாங்கம்பிட்டி கிராம மக்களின் மீள்குடியேற்றப் பிரச்சினைக்குத் தீர்வுகாணும் நோக்கில் தொடர்ந்து கவனம் செலுத்தப்படும் என்றும் உறுதியளித்தார்.