Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
உள்ளூர்

வட, கிழக்கின் மனித உரிமைகள் குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு புதிய அறிக்கை

15 Oct 2026, 10:19 AM
பார்வைகள்: 197
வட, கிழக்கின் மனித உரிமைகள் குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு புதிய அறிக்கை

மூன்று தசாப்தகால ஆயுத மோதல்களால் சமூக மற்றும் பொருளாதார ரீதியில் கடுமையாகப் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள், போரின் நீண்டகாலத் தாக்கங்களிலிருந்து இன்னமும் முழுமையாக விடுபடவில்லை எனச் சுட்டிக்காட்டியுள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, அப்பகுதி மக்களின் மனித உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கான பல்வேறு பரிந்துரைகளை அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளது.

வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விவகாரம், மனிதப்புதைகுழிகள், வடக்கு முஸ்லிம்களின் வெளியேற்றம், இராணுவமயமாக்கல் மற்றும் காணி உரிமைப் பிரச்சினைகள் உள்ளிட்ட முக்கிய விடயங்களில் அரசாங்கம் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் ஆணைக்குழு தனது அறிக்கையில் விரிவாகக் குறிப்பிட்டுள்ளது.

போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மக்களின் சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்குத் தடையாக உள்ள நீண்டகாலக் கட்டமைப்புசார் பிரச்சினைகளைக் கண்டறிந்து, அவற்றுக்குத் தீர்வுகளை முன்வைக்கும் நோக்கில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

1983 முதல் 2009 வரை இடம்பெற்ற ஆயுத மோதல்கள், 2004ஆம் ஆண்டு சுனாமிப் பேரழிவு மற்றும் அவற்றுக்குப் பின்னரான சமூக, பொருளாதாரச் சூழல்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, 2024 ஒக்டோபர் முதல் 2025 டிசம்பர் வரையான காலப்பகுதியில் திரட்டப்பட்ட தரவுகள், கள விஜயங்கள் மற்றும் பல்வேறு தரப்பினருடனான கலந்துரையாடல்களின் அடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விவகாரத்தில் நீதி அவசியம்

2016ஆம் ஆண்டு காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் நிறுவப்பட்ட போதிலும், நிதிப் பற்றாக்குறை, நிர்வாகச் சிக்கல்கள், அரசியல் ரீதியிலான அர்ப்பணிப்பின்மை மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பான ஆவணங்களை முறையாகப் பேணுவதில் காணப்படும் குறைபாடுகள் காரணமாக, அந்த அலுவலகத்தின் மீதான நம்பிக்கையைப் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் இழந்துள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

வலிந்து காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளுக்கு என்ன நேர்ந்தது என்பது தொடர்பான உண்மையை வெளிப்படுத்தி நீதியை நிலைநாட்ட வேண்டும் என வலியுறுத்தி, பெரும்பாலும் பெண்களின் தலைமையில் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன.

இழப்பீடுகள் அல்லது மரணச் சான்றிதழ்கள் மாத்திரம் தமக்குத் தீர்வாக அமையாது எனத் தெரிவிக்கும் அவர்கள், தமது உறவுகளின் நிலை குறித்து உண்மையை அறிந்துகொள்ள விரும்புவதாகவும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

அதேவேளை, போராட்டங்களில் ஈடுபடும் குடும்பங்கள் பொலிஸாரின் ஒடுக்குமுறைகள் மற்றும் கண்காணிப்புகளுக்கு முகங்கொடுத்து வருவதாகவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மனிதப்புதைகுழிகள் தொடர்பான விசாரணைகளைத் துரிதப்படுத்த வேண்டும்

சர்வதேச நியமங்களுக்கு அமைவாக, மனிதப்புதைகுழிகளைக் கண்டறிவது முதல் அவற்றுடன் தொடர்புடைய விசாரணைகள் மற்றும் நீதியை நிலைநாட்டுவது வரையான நடவடிக்கைகளை முன்னெடுக்க அரசாங்கத்துக்குப் பொறுப்புகள் உள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

2023ஆம் ஆண்டு தரவுகளின்படி, இலங்கையில் 32 மனிதப்புதைகுழிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவற்றில் 13 வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அமைந்துள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

செம்மணி மனிதப்புதைகுழியில் முன்னெடுக்கப்பட்ட அகழ்வுப் பணிகளின்போது 580க்கும் மேற்பட்ட மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

மன்னார் மனிதப்புதைகுழி வழக்கில் நீதிபதிகள் மற்றும் அரச மருத்துவ அதிகாரிகள் அடிக்கடி இடமாற்றம் செய்யப்பட்டமை விசாரணைகளில் தாமதத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மேலும், தடயவியல் மற்றும் தொல்லியல் துறைகளில் நிபுணர்களின் பற்றாக்குறை, மரபணுப் பரிசோதனைகளுக்கான போதிய தொழில்நுட்ப வசதிகள் இன்மை உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகளும் அடையாளம் காணப்பட்டுள்ளன.

செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வுப் பணிகளில் நிலையான வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டியதன் அவசியத்தையும், பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிரான அச்சுறுத்தல்களைத் தடுக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

அத்துடன், வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களிடமிருந்து மரபணு மாதிரிகளைச் சேகரித்து, அவற்றை முறையாகப் பாதுகாப்பதற்கான மரபணு வங்கியொன்றை நிறுவ வேண்டும் எனவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

வடக்கு முஸ்லிம்களின் வெளியேற்றம் தொடர்பில் விசாரணை அவசியம்

1990ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த சுமார் 75,000 முஸ்லிம்கள், தமது சொத்துக்கள், வாழ்வாதாரங்கள் மற்றும் ஆவணங்களைக்கூட எடுத்துச் செல்ல போதிய அவகாசம் வழங்கப்படாமல் வெளியேற்றப்பட்டதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இதன் காரணமாக, பாதிக்கப்பட்ட மக்கள் கல்வி, வாழ்வாதாரம் மற்றும் குடும்ப உறவுகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் பாதிப்புகளை எதிர்கொண்டதுடன், புத்தளம் உள்ளிட்ட பகுதிகளில் பல தசாப்தங்களாகப் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் வாழ்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2009ஆம் ஆண்டு போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பின்னர், அகதிகளின் மீள்குடியேற்றம் தொடர்பான அரசாங்கத்தின் நடவடிக்கைகளில் வடக்கு முஸ்லிம்களின் பிரச்சினைகள் போதிய கவனத்தைப் பெறவில்லை எனவும் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

வடக்கு முஸ்லிம்களின் வெளியேற்றம் தொடர்பில் முறையான அரச விசாரணைகளும் வரலாற்று ஆவணப்படுத்தல்களும் மேற்கொள்ளப்படாதிருப்பது குறித்தும் அறிக்கையில் கவலை வெளியிடப்பட்டுள்ளது.

அவசரமாக வெளியேறியபோது காணி உறுதிப்பத்திரங்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை இழந்த குடும்பங்கள், வடக்கில் தமது காணி உரிமைகளை மீள உறுதிப்படுத்துவதில் பல்வேறு தடைகளை எதிர்கொண்டு வருகின்றன.

அதேவேளை, நீண்டகாலப் போரினால் காணி மற்றும் வளப்பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ள தமிழ்ச் சமூகத்துக்கும் வடக்கில் மீள்குடியேற விரும்பும் முஸ்லிம் மக்களுக்கும் இடையில் வளங்களைப் பகிர்ந்துகொள்வது தொடர்பில் முரண்பாடுகள் காணப்படுவதாகவும் அறிக்கை குறிப்பிடுகிறது.

இந்த விவகாரம் தொடர்பில் பல்வேறு தரப்பினருடன் நடத்திய கலந்துரையாடல்களின் பின்னர், காணி உரிமைப் பிரச்சினைகளை மூன்று மாதங்களுக்குள் சீர்செய்வதாக உரிய அதிகாரிகளிடமிருந்து வாக்குறுதி பெறப்பட்டுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மேலும், கல்வி, சுகாதாரம், வாழ்வாதாரம் மற்றும் போலிக் காணி உறுதிப்பத்திரங்கள் தொடர்பான பிரச்சினைகளுக்கும் தீர்வுகாணுமாறு அரசாங்கத்திடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்கில் இராணுவமயமாக்கலைக் குறைக்கப் பரிந்துரை

வடக்கு மாகாணத்தில் 1990ஆம் ஆண்டு முதல் தனியாருக்குச் சொந்தமான காணிகள் படையினரால் கையகப்படுத்தப்பட்டிருப்பதாகவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரையில் நிரந்தரத் தீர்வுகள் வழங்கப்படாத நிலை காணப்படுவதாகவும் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

அதேபோன்று, கிழக்கு மாகாணத்தில் 2010 முதல் 2012ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களைக் குறிப்பிட்டு படையினரால் கையகப்படுத்தப்பட்ட விவசாய நிலங்கள், பத்து ஆண்டுகளுக்கும் மேலாகியும் உரிமையாளர்களிடம் மீள ஒப்படைக்கப்படாத நிலை காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இராணுவ முகாம்களுக்குள் அமைந்துள்ள தனியார் காணிகளில் மேற்கொள்ளப்படும் விவசாய நடவடிக்கைகள் தொடர்பிலும் அறிக்கையில் கவலை வெளியிடப்பட்டுள்ளது.

அங்கு உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருட்கள் சந்தை விலையைவிடக் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுவதால், உள்ளூர் விவசாயிகள் பாதிக்கப்படுவதாகவும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இராணுவமயமாக்கலைக் குறைத்து, சிவில் நிர்வாகத்தை முழுமையாக மீள நிலைநிறுத்துவதற்கான தேசிய பாதுகாப்பு மறுசீரமைப்புச் செயன்முறை இல்லாமை, போருக்குப் பின்னரான நல்லிணக்க முயற்சிகளில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

காணிகளை விடுவித்து உள்ளூர் பொருளாதாரத்தை வலுப்படுத்த வேண்டும்

படையினரால் கையகப்படுத்தப்பட்ட காணிகளை அவற்றின் உரிமையாளர்களிடம் மீள ஒப்படைப்பதன் மூலம், வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களின் வாழ்வாதாரங்களைப் பாதுகாக்கவும் பொருளாதார முன்னேற்றத்தை ஊக்குவிக்கவும் முடியும் என ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

அத்துடன், பாதுகாப்பு அமைச்சுக்கு மாத்திரம் முன்னுரிமை வழங்காமல், ஏனைய அமைச்சுக்களுக்கும் உரிய நிதி ஒதுக்கீடுகளை மேற்கொண்டு, பொதுமக்கள் முன்னெடுக்கும் விவசாயம் மற்றும் ஏனைய தொழில் முயற்சிகளுக்கு ஆதரவளிக்க வேண்டும் எனவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் ம