Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
உள்ளூர்

கிணற்றில் விழுந்த பூனையை மீட்க முயன்ற பெண் தவறி விழுந்து உயிரிழப்பு!

22 Oct 2026, 11:08 AM
பார்வைகள்: 102
கிணற்றில் விழுந்த பூனையை மீட்க முயன்ற பெண் தவறி விழுந்து உயிரிழப்பு!

கேகாலை, வறக்காப்பொல பகுதியில் கிணற்றில் விழுந்த தனது பூனையை மீட்க முயன்ற 32 வயதுடைய பெண் ஒருவர், தவறுதலாக அதே கிணற்றுக்குள் விழுந்து உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவத்தில் வறக்காப்பொல பகுதியைச் சேர்ந்த கே.பி. தினேத்ரி இமேஷிகா உதானி என்ற திருமணமாகாத பெண்ணே உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் இரவு 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது. பூனை கிணற்றுக்குள் விழுந்த சத்தத்தைக் கேட்ட பெண், தனது தந்தையுடன் இணைந்து அதனை மீட்பதற்காகக் கிணற்றுக்கு சென்றுள்ளார்.

குறித்த கிணற்றைச் சுற்றி தரைமட்டத்திலிருந்து சுமார் மூன்று அடி உயரத்தில் பாதுகாப்புச் சுவர் அமைக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன்போது, தனது கைத்தொலைபேசியின் மின்விளக்கைப் பயன்படுத்தி கிணற்றின் உட்பகுதியைப் பெண் பார்வையிட்டுள்ளார்.

கிணற்றுக்குள் பூனை விழுந்து கிடப்பதைக் கண்ட இருவரும் அதனை மீட்க முயற்சித்துள்ளனர். இதன்போது, கைத்தொலைபேசி மின்விளக்கைப் பிடித்திருந்த பெண் எதிர்பாராத விதமாகக் கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிணற்றுக்குள் விழுந்த பெண்ணை உறவினர்கள் உடனடியாக மீட்டு, நிட்டம்புவை வதுபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். எனினும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

கிணற்றுக்குள் விழுந்தபோது, பெண்ணின் தலை கொங்கிறீட் பகுதியில் பலமாக மோதியதால் ஏற்பட்ட கடுமையான காயமே உயிரிழப்புக்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.