Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
உள்ளூர்

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பல உரிய முறையில் பதிவாவதில்லை – திருகோணமலை அரசாங்க அதிபர்

23 Oct 2026, 09:44 AM
பார்வைகள்: 307
பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பல உரிய முறையில் பதிவாவதில்லை – திருகோணமலை அரசாங்க அதிபர்

திருகோணமலை மாவட்டத்தில் பாலின அடிப்படையிலான குடும்ப வன்முறைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வொன்று நடைபெற்றுள்ளது.

இலங்கைப் பெண்கள் கல்வி, சுகாதாரம், நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முன்னேற்றம் அடைந்து வருவதுடன், உயர்பதவிகளை வகிப்பதற்கும் அதிக வாய்ப்புகளைப் பெற்றுள்ளதாகத் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார தெரிவித்துள்ளார்.

எனினும், வெளிப்படையாகப் பார்க்கும்போது பெண்களின் முன்னேற்றம் சிறப்பாகத் தென்பட்டாலும், அதன் பின்னணியில் பல்வேறு துயரமான சம்பவங்கள் காணப்படுவதாகவும், குறிப்பாகப் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் துன்புறுத்தல்கள் தொடர்பான பல சம்பவங்கள் உரிய முறையில் பதிவுசெய்யப்படாமை பாரிய பிரச்சினையாக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாலின அடிப்படையிலான குடும்ப வன்முறைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு விழிப்புணர்வூட்டும் நிகழ்வு, கடந்த 22ஆம் திகதி திருகோணமலை மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. இதன்போதே மாவட்ட அரசாங்க அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தேசிய சிறுவர் பாதுகாப்பு மற்றும் பெண்கள் பணியகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வுக்கு ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம் நிதியுதவி வழங்கியிருந்தது.

இதன்போது, ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்தின் நிகழ்ச்சித் திட்டப் பகுப்பாய்வாளர்களான சட்டத்தரணி உதெனி தெவரப்பெரும மற்றும் பிமாலி அமரசேகர ஆகியோர் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் அதிகாரிகளுக்குப் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை அடையாளம் காணுதல், அவற்றைத் தடுத்தல் மற்றும் அவை தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விளக்கமளித்தனர்.

மேலும், பெண்கள் விவகாரப் பணியகத்தின் ஆலோசகர் ருவன் ஹெட்டியாராச்சி நிகழ்ச்சித் திட்டம் தொடர்பான விளக்கங்களை வழங்கினார்.

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வந்த விழிப்புணர்வு நிகழ்ச்சித் தொடரின் இறுதி நிகழ்வு திருகோணமலையில் நடைபெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்டப் பிரதிப் பொலிஸ் மா அதிபர் மஹிந்த திசாநாயக்க, பிரதேச செயலாளர்கள், இலங்கைப் பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின் அதிகாரிகள், பிரதேச மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டனர்.