Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
உள்ளூர்

லாஃப் எரிவாயு நிறுவனத்தின் மூன்று கப்பல்கள் இம்மாதம் இலங்கையை வந்தடையும்!

04 Nov 2026, 11:30 AM
பார்வைகள்: 55
லாஃப் எரிவாயு நிறுவனத்தின் மூன்று கப்பல்கள் இம்மாதம் இலங்கையை வந்தடையும்!

லாஃப் எரிவாயு நிறுவனம் கொள்வனவு செய்துள்ள திரவப் பெற்றோலிய வாயுவை (LPG) ஏற்றிய மூன்று கப்பல்கள் இம்மாதத்திற்குள் இலங்கையை வந்தடையவுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, குறித்த மூன்று கப்பல்களும் அம்பாந்தோட்டை மற்றும் கொழும்பு துறைமுகங்களை வந்தடையவுள்ளன.

இதற்கமைய, முதலாவது எரிவாயுக் கப்பல் இம்மாதம் 12ஆம் திகதி முதல் 14ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் அம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடையவுள்ளது.

இரண்டாவது கப்பல் 15ஆம் திகதி முதல் 17ஆம் திகதிக்கு இடையில் கொழும்பு துறைமுகத்தையும், மூன்றாவது கப்பல் 24ஆம் திகதி முதல் 28ஆம் திகதிக்கு இடையில் அம்பாந்தோட்டை துறைமுகத்தையும் வந்தடையவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த எரிவாயுத் தொகுதிகள் நாட்டை வந்தடைந்ததும், சுங்க அனுமதி நடைமுறைகளை நிறைவு செய்து அவற்றை விடுவிப்பதுடன், படிப்படியாக சந்தைக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

25 ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கையின் எரிவாயுச் சந்தையில் சேவையாற்றி வரும் உள்நாட்டு நிறுவனமான லாஃப், எரிவாயு விநியோகத்தை வழமைக்குக் கொண்டுவருவதற்கும், நீண்டகால விநியோகத்தின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இதற்கிடையில், மத்திய கிழக்கில் நிலவும் மோதல் சூழல் மற்றும் ஹோர்முஸ் நீரிணை ஊடான கடல்சார் போக்குவரத்தில் ஏற்பட்டுள்ள தடைகள் காரணமாக சர்வதேச எரிவாயு விநியோக வலையமைப்பு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.