Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
உள்ளூர்

இறக்குமதி கொடுப்பனவுகள் கண்காணிப்புக்கு புதிய ஒழுங்குமுறை அமுல்

19 Jun 2026, 11:45 AM
பார்வைகள்: 364
இறக்குமதி கொடுப்பனவுகள் கண்காணிப்புக்கு புதிய ஒழுங்குமுறை அமுல்

இலங்கையிலிருந்து மேற்கொள்ளப்படும் இறக்குமதிகளுக்கான வெளிநாட்டு நாணயக் கொடுப்பனவுகளை மேலும் திறம்படக் கண்காணிக்கும் நோக்கில் அரசாங்கம் புதிய ஒழுங்குமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கான வர்த்தமானி அறிவித்தல் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி Anura Kumara Dissanayake அவர்களால் வெளியிடப்பட்டுள்ளதுடன், புதிய உத்தரவுகள் இன்று (19) முதல் நடைமுறைக்கு வந்துள்ளன.இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ள இந்த ஒழுங்குமுறைகளின் படி, இறக்குமதி பரிவர்த்தனைகளுக்காக மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு கொடுப்பனவிற்கும் வங்கிகள் மூலம் சிறப்பு பரிவர்த்தனை எண் வழங்கப்பட வேண்டும். மேலும், அவை தொடர்பான அனைத்து தகவல்களும் இலங்கைச் சுங்கத் திணைக்களத்திற்கு கட்டாயமாக அறிவிக்கப்பட வேண்டும்.

இதன்படி, இறக்குமதியாளரின் வரி அடையாள எண் (TIN), முகவரி, பயனாளர் விவரங்கள், வங்கி மற்றும் கிளைக் குறியீடுகள், கொடுப்பனவுத் தொகை, நாணய வகை, கொடுப்பனவு மற்றும் விநியோக நிபந்தனைகள், கொடுப்பனவுத் திகதி, தற்காலிக விலைப்பட்டியல் எண் மற்றும் இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விவரங்கள் உள்ளிட்ட தகவல்கள் சுங்கத் திணைக்களத்திற்கு வழங்கப்பட வேண்டும்.அதேவேளை, பொருட்களை இறக்குமதி செய்வதற்கான முற்கொடுப்பனவுகளை மேற்கொள்வதற்கு முன்னர், இறக்குமதியாளர்கள் இலங்கைச் சுங்கத் திணைக்களத்தில் தகுதிவாய்ந்த இறக்குமதியாளர்களாக பதிவு செய்யப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பதிவு செய்யாத இறக்குமதியாளர்களுக்கு வர்த்தக வங்கிகள் மூலம் முற்கொடுப்பனவுகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட மாட்டாது என புதிய ஒழுங்குமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.இந்நடவடிக்கையின் மூலம் இறக்குமதித் துறையில் வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பதோடு, வெளிநாட்டு நாணய வெளியேற்றத்தை முறையாகக் கண்காணிப்பதற்கும் அரசாங்கம் இலக்கு வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.