Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
உள்ளூர்

ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்ட 9 மாத சிறைத்தண்டனை மேல் நீதிமன்றத்தால் உறுதி

23 Jun 2026, 02:06 PM
பார்வைகள்: 187
ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்ட 9 மாத சிறைத்தண்டனை மேல் நீதிமன்றத்தால் உறுதி

இஸ்லாமிய மார்க்கத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டு, இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயன்ற குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் புஜ்ய கலகொட அத்தே ஞானசார தேரருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் விதித்த 9 மாத சிறைத்தண்டனையை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (23) உறுதி செய்துள்ளது.தன்னை இந்த தண்டனையில் இருந்து விடுவிக்குமாறு கோரி ஞானசார தேரர் தாக்கல் செய்திருந்த மேன்முறையீட்டு மனுவை நிராகரித்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

2016ஆம் ஆண்டு கிருலப்பனை பகுதியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில், இஸ்லாமிய மார்க்கத்தை அவமதிக்கும் வகையிலும், இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலும் கருத்து வெளியிட்டதாகக் கூறி தண்டனைச் சட்டக்கோவையின் கீழ் பொலிஸாரால் ஞானசார தேரருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டது.நீண்ட விசாரணைக்குப் பின்னர், குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதையடுத்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் அவருக்கு 9 மாத சிறைத்தண்டனை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.