Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
உள்ளூர்

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த மேலும் 7 மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்புகள்

26 Jun 2026, 02:36 PM
பார்வைகள்: 264
கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த மேலும் 7 மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்புகள்

தேசிய மின் கட்டமைப்பை ஸ்திரப்படுத்தி, மின்சார விநியோகத்தின் நம்பகத்தன்மையை அதிகரிக்கும் நோக்கில் அரசாங்கம் முன்னெடுத்து வரும் மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்பு (Battery Energy Storage System) திட்டத்தின் கீழ் மேலும் ஏழு சேமிப்பு அமைப்புகள் நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.இந்த அமைப்புகள் பாணந்துறை, பெலியத்த, அம்பாந்தோட்டை, அம்பாறை, வவுணதீவு, வாழைச்சேனை மற்றும் மஹியங்கனை ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள மின்சார விநியோக துணை மின் நிலையங்களுக்கு அருகில் நிறுவப்படவுள்ளன.

புதியதாக கொண்டுவரப்பட்ட இந்த ஏழு அமைப்புகளின் மூலம் 280 மெகாவோல்ட் அளவிலான மின்சார ஆற்றலை சேமிக்க முடிவதுடன், நாளாந்தம் 70 மெகாவோல்ட் மின்சாரத்தை தேசிய மின் கட்டமைப்பிற்கு வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.சர்வதேச போட்டித்தன்மை வாய்ந்த கேள்விப்பர கோரல் நடைமுறையின் மூலம் தெரிவு செய்யப்பட்ட விண்ட்போர்ஸ் தனியார் நிறுவனம், இந்த அமைப்புகளை நிறுவும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதனுடன், மேலும் ஆறு இடங்களில் இதேபோன்ற ஆற்றல் சேமிப்பு அமைப்புகளை நிறுவும் பணிகளும் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இத்திட்டத்தின் முதல் கட்டமாக கடந்த ஜூன் மாத தொடக்கத்தில் நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட எட்டு மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்புகள் தற்போது தெரிவு செய்யப்பட்ட துணை மின் நிலையங்களுக்கு அருகில் நிறுவப்பட்டு வருகின்றன. அவற்றின் நிறுவல் பணிகள் ஜூலை மாத இறுதிக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதுடன், அதன் மூலம் 80 மெகாவோல்ட் மின்சார ஆற்றல் தேசிய மின் கட்டமைப்பிற்கு பங்களிக்கப்படும்.இந்த சேமிப்பு அமைப்புகளின் கட்டுப்பாடு மற்றும் மேலாண்மை பொறுப்புகள் மின்சக்தி அமைச்சின் கீழ் செயல்படும் என்.எஸ்.ஓ. நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளதுடன், பராமரிப்பு நடவடிக்கைகள் சம்பந்தப்பட்ட நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டம் மூலம் சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் நிலையான மின்சார விநியோகத்தை உறுதிப்படுத்துவதோடு, தேசிய மின் கட்டமைப்பின் செயல்திறனையும் மேம்படுத்த முடியும் என அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. மேலும், திட்டத்தின் பயன்களை எதிர்காலத்தில் நேரடியாக மின்சார நுகர்வோருக்கு வழங்குவதே அரசாங்கத்தின் பிரதான நோக்கமாகும் என துறைமுகம் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.