Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
உள்ளூர்

சட்ட நடவடிக்கைகளை அரசியல் பழிவாங்கலாக சித்தரிக்க வேண்டாம் – பாராளுமன்றத்தில் ஜனாதிபதி

26 Jun 2026, 02:51 PM
பார்வைகள்: 376
சட்ட நடவடிக்கைகளை அரசியல் பழிவாங்கலாக சித்தரிக்க வேண்டாம் – பாராளுமன்றத்தில் ஜனாதிபதி

ஊழல் மற்றும் பாரிய குற்றச்செயல்களுக்கு எதிராக சட்டத்தின் அடிப்படையில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளை அரசியல் பழிவாங்கலாக சித்தரிக்க வேண்டாம் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.பாராளுமன்றத்தில் இன்று (25) உரையாற்றிய ஜனாதிபதி, ஊழல், படுகொலைகள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்கள் தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்கும் அரச அதிகாரிகளை எதிர்க்கட்சிகள் எதிரிகளாகப் பார்க்கின்றன என்றும் குற்றஞ்சாட்டினார்.

கடந்தகால ஊழல் மற்றும் படுகொலை சம்பவங்களின் பின்னணியில் அரசியல் அதிகாரமும் அதன் ஆதரவும் இருந்ததாகக் கூறிய அவர், ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை, ரக்பி வீரர் வசீம் தாஜுதீன் மரணம் மற்றும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்பில் உண்மைகளை வெளிக்கொணர வேண்டியது அவசியம் என வலியுறுத்தினார்.நாட்டு மக்கள் விசாரணைகளுக்கு எதிராக இல்லை என்றும், குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்களும் அவர்களது ஆதரவாளர்களுமே அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். எந்தவித அழுத்தங்களும் போராட்டங்களும் விசாரணைகளை நிறுத்தாது என்றும் அவர் கூறினார்.

மக்கள் தமக்கு வழங்கிய ஆணை ஊழலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கானது என்றும், எனவே சட்ட நடவடிக்கைகளை அரசியல் பழிவாங்கலாக விளக்க முயற்சிக்கக் கூடாது என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.மேலும், பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புடையதாக குற்றஞ்சாட்டப்படும் நபர்கள் தொடர்பில் அரசியல் கட்சிகள் ஒழுக்காற்று நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

நீதிமன்ற விசாரணைகளைத் தவிர்த்து வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றவர்களை நாட்டிற்கு அழைத்து வர சர்வதேச பிடியாணைகள் பிறப்பிக்கப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.இதனுடன், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய்வதற்கான நடவடிக்கைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இந்த ஆண்டுக்குள் அந்தச் சட்டம் முழுமையாக நீக்கப்படும் என உறுதியளித்தார்.ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்கள் மற்றும் பாதாள உலக நடவடிக்கைகளை கட்டுப்படுத்த புதிய விசேட சட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும், நீதிமன்றங்களில் நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.நீதித்துறையின் சுயாதீனத்தன்மையைப் பாதுகாக்கும் வகையில் உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றங்களின் வெற்றிடங்கள் நிரப்பப்படும் என்றும், நீதித்துறைக்கு எந்தவித அழுத்தமும் செலுத்த வேண்டிய அவசியம் அரசாங்கத்திற்கு இல்லை என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.