Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
உள்ளூர்

இலங்கையில் தினமும் 30 பேர் விபத்துகளில் உயிரிழப்பு – சுகாதார அமைச்சு எச்சரிக்கை

02 Jul 2026, 02:22 PM
பார்வைகள்: 200
இலங்கையில் தினமும் 30 பேர் விபத்துகளில் உயிரிழப்பு – சுகாதார அமைச்சு எச்சரிக்கை

இலங்கையில் பல்வேறு வகையான விபத்துகள் காரணமாக நாள்தோறும் சராசரியாக 30 பேர் உயிரிழப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட சுகாதார அமைச்சின் தொற்றா நோய்ப் பிரிவின் சமூக மருத்துவ விசேட நிபுணர் வைத்தியர் சமித்த சிறித்துங்க இந்த தகவலை வெளியிட்டார்.அவரின் கூற்றுப்படி, நாட்டில் ஒவ்வொரு மூன்று மணித்தியாலங்களுக்கும் சராசரியாக நான்கு பேர் விபத்துகளால் உயிரிழக்கின்றனர். ஆண்டுதோறும் 8,000 முதல் 10,000 வரையிலான மரணங்கள் பல்வேறு விபத்துகள் காரணமாக பதிவாகி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

விபத்துகள் குறித்து பேசும்போது பொதுவாக வீதி விபத்துகளுக்கு மட்டுமே அதிக கவனம் செலுத்தப்படுகின்றது. ஆனால், உயரமான இடங்களில் இருந்து கீழே விழுதல், நீரில் மூழ்குதல், மின்சாரத் தாக்கம் மற்றும் விஷப்பாம்பு கடி போன்ற காரணங்களாலும் கணிசமான எண்ணிக்கையில் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன என்று அவர் சுட்டிக்காட்டினார்.இந்த அனைத்து விபத்துகளையும் உள்ளடக்கியே நாளாந்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை சுமார் 30 ஆக இருப்பதாக அவர் தெரிவித்தார்.மேலும், இவ்வாறான பெரும்பாலான உயிரிழப்புகள் தடுக்கக்கூடிய காரணங்களால் ஏற்படுகின்றன என்பதால், பொதுமக்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என்றும், இது சமூகத்திற்கு மிகப்பெரிய சவாலாக மாறியுள்ளதாகவும் வைத்தியர் சமித்த சிறித்துங்க வலியுறுத்தினார்.