Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
உள்ளூர்

நெடுந்தீவு அபிவிருத்திக்கு ரூ.2,000 மில்லியன் வரை ஒதுக்கீடு – அமைச்சர் பிமல் ரட்நாயக்க

06 Jul 2026, 11:05 AM
பார்வைகள்: 122
நெடுந்தீவு அபிவிருத்திக்கு ரூ.2,000 மில்லியன் வரை ஒதுக்கீடு – அமைச்சர் பிமல் ரட்நாயக்க

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பேற்று கடந்த 20 மாதங்களில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்துள்ளதுடன், ஊழல் மற்றும் இனவாதத்தை ஒழிக்கும் நடவடிக்கைகளிலும் முன்னேற்றம் கண்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.நெடுந்தீவில் அமைக்கப்படவுள்ள புதிய எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கான அடிக்கல் நாட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர், நெடுந்தீவின் அபிவிருத்திக்காக ரூ.1,500 மில்லியன் முதல் ரூ.2,000 மில்லியன் வரை நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

நெடுந்தீவு மக்களின் நீண்டகால எரிபொருள் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வாக இந்த எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கப்படவுள்ளதாகவும், எந்தவித இலாப நோக்கமுமின்றி இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் இந்தத் திட்டத்தை முன்னெடுக்க ஒப்புக்கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.இந்தத் திட்டத்தை நவம்பர் மாதத்திற்குள் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டிருந்தாலும், செப்டெம்பர் மாத நடுப்பகுதிக்குள் பணிகளை முடிக்குமாறு ஒப்பந்தக்காரர்களிடம் தாம் கோரிக்கை விடுத்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். கட்டுமானப் பணிகளுக்குத் தேவையான பொருட்கள், சேவைகள் மற்றும் ஆதரவுகளை கடற்படையும் பிரதேச செயலகமும் வழங்கி, திட்டத்தை விரைவாக நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் அறிவுறுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

நெடுந்தீவின் அபிவிருத்திக்கு அரசாங்கம் முன்னுரிமை வழங்கி வருவதாகவும், கடந்த ஒரு மாதத்திற்குள் சுகாதார அமைச்சர், எரிசக்தி அமைச்சர் ஆகியோர் தங்களது துறைகளுடன் தொடர்புடைய அபிவிருத்தித் திட்டங்களை ஆய்வு செய்ய வருகை தந்திருந்ததாகவும் அமைச்சர் தெரிவித்தார். அதேபோல், தாமும் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரருடன் இணைந்து நெடுந்தீவுக்கு வருகை தந்துள்ளதாகவும் கூறினார்.நெடுந்தீவுக்கு தங்களது வருகை அரசியல் நோக்கத்திற்காக அல்ல என்றும், தீவின் கல்வி, சுற்றுலா, மீன்பிடி உள்ளிட்ட துறைகளை மேம்படுத்துவதே அரசாங்கத்தின் பிரதான நோக்கம் என்றும் அவர் வலியுறுத்தினார்.மக்கள் வழங்கிய 60 மாத ஆட்சிக்காலத்தில் இதுவரை 20 மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், இனவாதம், மதவாதம் மற்றும் ஊழலுக்கு எதிராக அரசாங்கம் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

வடக்கும் தெற்கும் இடையே பல தசாப்தங்களாக உருவாக்கப்பட்ட அரசியல் பிளவுகள் நாட்டில் வன்முறைக்கு வழிவகுத்ததாக சுட்டிக்காட்டிய அவர், மீண்டும் அவ்வாறான நிலை உருவாக அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காது என்றார். அதேவேளை, இனவாத அரசியலுக்கு மக்கள் மீண்டும் இடமளிக்கக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.நெடுந்தீவு மக்கள் அரசாங்கத்தின் அபிவிருத்தி முயற்சிகளுக்கு தொடர்ந்தும் ஆதரவு வழங்குவார்கள் என்ற நம்பிக்கை இருப்பதாகவும், அவர்களுடன் இணைந்து தொடர்ந்து பணியாற்றுவோம் என்றும் அமைச்சர் பிமல் ரட்நாயக்க தெரிவித்தார்.