Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
உள்ளூர்

கஜேந்திரகுமார் தொடர்பில் சபாநாயகரிடம் அர்ச்சுனா முறைப்பாடு

08 Jul 2026, 02:53 PM
பார்வைகள்: 286
கஜேந்திரகுமார் தொடர்பில் சபாநாயகரிடம் அர்ச்சுனா முறைப்பாடு

பாராளுமன்ற வளாகத்தில் தமக்கு எதிராக அநாகரிகமான வார்த்தைப் பிரயோகம் மேற்கொண்டதாகக் குற்றஞ்சாட்டி, பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை பாராளுமன்ற சிறப்புரிமைக் குழுவிலிருந்து தற்காலிகமாக இடைநீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.இன்று (8) பாராளுமன்றத்தில் உரையாற்றிய அர்ச்சுனா, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனது உரையை நிறைவு செய்த பின்னர், தம்மை நோக்கி அவதூறான மற்றும் அநாகரிகமான வார்த்தைகளைப் பயன்படுத்தியதாக குற்றஞ்சாட்டினார்.

இந்தச் சம்பவம் பாராளுமன்றத்தின் காணொளிப் பதிவுகளில் இடம்பெற்றிருப்பதாகவும், அதனை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.மேலும், கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் ஆதரவாளர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் எனக் கூறப்படும் ஐந்து பேருக்கு எதிராக, தமக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்ததாக மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும், தமக்கு பலமுறை உயிர் அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளதாகவும் அர்ச்சுனா சபையில் குறிப்பிட்டார்.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒழுக்கக் கோவையின் விதிகளுக்கு அமைவாக, இந்த விவகாரத்தை பாராளுமன்ற சிறப்புரிமைக் குழுவின் விசாரணைக்கு அனுப்புமாறும் அவர் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார்.அத்துடன், குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அதே சிறப்புரிமைக் குழுவில் உறுப்பினராக இருப்பது விசாரணையின் சுயாதீனத்தன்மை மற்றும் நம்பகத்தன்மை தொடர்பில் சந்தேகங்களை எழுப்பக்கூடும் என்பதால், விசாரணைகள் நிறைவடையும் வரை அவரை அக்குழுவிலிருந்து தற்காலிகமாக இடைநீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அர்ச்சுனா வலியுறுத்தினார்.