Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
உள்ளூர்

மூன்று மாவட்டங்களுக்கு வெப்பநிலை எச்சரிக்கை; பொதுமக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்கள்

09 Jul 2026, 11:29 AM
பார்வைகள்: 407
மூன்று மாவட்டங்களுக்கு வெப்பநிலை எச்சரிக்கை; பொதுமக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்கள்

மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை மாவட்டங்களின் சில பகுதிகளில் நாளை மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்தை எட்டக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.உலகளாவிய காலநிலை கணிப்பு மாதிரிகள், வளிமண்டல ஈரப்பதம் மற்றும் அதிகபட்ச வெப்பநிலை ஆகியவற்றின் அடிப்படையில் இந்த வெப்பச் சுட்டெண் கணக்கிடப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனை முன்னிட்டு, திறந்தவெளியில் பணியாற்றுபவர்கள் போதியளவு தண்ணீர் அருந்துவதுடன், இடையிடையே நிழலான இடங்களில் ஓய்வெடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், வீட்டிலுள்ள முதியவர்கள் மற்றும் நோயாளிகளின் உடல்நிலையை உன்னிப்பாகக் கவனிக்கவும், சிறுவர்களை எந்தச் சூழலிலும் வாகனங்களுக்குள் தனியாக விடாமல் இருக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.அதிக வெயில் நிலவும் நேரங்களில் கடினமான உடல் உழைப்பைத் தவிர்க்கவும், வெளியே செல்லும்போது வெளிர் நிறம் அல்லது வெள்ளை நிற பருத்தி ஆடைகளை அணியவும் பொதுமக்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.வெப்பநிலை அதிகரிப்பால் உடல்நல பாதிப்பு அல்லது அசௌகரியம் ஏற்பட்டால், தாமதமின்றி மருத்துவ ஆலோசனையைப் பெறுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.