புலம்பெயர் முதலீடுகளை தடுக்க முனையும் தமிழ் அரசியல் பிரதிநிதிகள் !

user 15-Dec-2024 இலங்கை 299 Views

போரினால் அழிவுகளை எதிர்கொண்டுள்ள தமிழர் தாயகப் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் புலம்பெயர்ந்த தமிழர்களின் அந்நிய முதலீடுகளுக்கு தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைவர்கள் எதிர்ப்பு வெளியிடுகின்றமை விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈழத் தமிழரின் பாரிய முதலீட்டுடன் யாழ்ப்பாணத்தின் கீரிமலைப் பகுதியில் மேற்கொள்ளப்படவுள்ள தகவல் தொழில்நுட்ப பல்கலைகழகத்திற்கு காணிகளை வழங்குவது தொடர்பாக தமிழ் அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு வெளியிடுவதானது எதிர்கால முதலீடுகளை பாதிக்க செய்யும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம், காங்கேசன்துறையில் நிர்மாணிக்கப்பட்டுவரும் ஜனாதிபதி மாளிகையானது தகவல் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தை நிர்மாணிப்பதற்காக சிலிட் எனப்படும்  இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனத்திற்கு சுமார் 50 வருட குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது.

புலம்பெயர் தமிழரும் கனேடிய முதலீட்டாளருமான இந்திரகுமார் பத்மநாதனுடன் இணைந்து இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனம், ஜனாதிபதி மாளிகையை தகவல் தொழில்நுட்ப பல்கலைக்கழகமாக அபிவிருத்தி செய்யவுள்ளது.

northern Uni தகவல் தொழில்நுட்ப பல்கலைக்கழகமாக ஜனாதிபதி மாளிகை அபிவிருத்தி செய்யப்படவுள்ளதுடன், இதில் ஈழத் தமிழரான இந்திரன் பத்மநாதன் தலைமையிலான கனேடிய நிறுவனம் முதலீடு செய்துள்ளது.

கடந்த முப்பது வருடகால யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள வடமாகாண இளைஞர், யுவதிகளின் தகவல் தொழில்நுட்ப அறிவை மேம்படுத்தி, பூரணப்படுத்துவதன் ஊடாக எதிர்கால நவீன உலகிற்கு பொருந்துபவர்களாக அவர்களை மாற்ற முடியும் என இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

எனினும் ஈழத் தமிழர் ஒருவரின் முதலீட்டுடன் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ளவர்களின் நலன்சார்ந்து சிந்தித்து செயற்படுத்தப்படும் இந்த பல்கலைகழக நிர்மாணத்திற்கு தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர்களே எதிர்ப்பு வெளியிடுகின்றமை தற்போது பேசுபொருளாகியுள்ளது.

பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டு, முதலீடுகளை மேற்கொள்ளும் புலம்பெயர்ந்த தமிழர்களை மேலும் ஊக்கமிழக்கச் செய்யும் வகையில் தமிழ் தலைவர்களின் செயற்பாடுகள் அமைந்துள்ளதாக துறைசார்ந்தவர்களும் பொதுமக்களும் விசனம் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு புலம்பெயர்ந்த தமிழர்களின் முதலீடுகளுக்கே தமிழ் அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு வெளியிடும் போது, எதிர்காலத்தில் வெளிநாட்டு முதலீடுகள் தமிழர் தாயகப் பகுதிகளுக்கு இல்லாது போகும் அபாயங்கள் உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறிப்பாக யாழ். மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தின் அனுமதி பெறப்படாமல், தனியார் முதலீட்டிற்கு எவ்வாறு அங்கீகாரம் வழங்கப்பட்டது என சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

 

 

Related Post

பிரபலமான செய்தி