கஜேந்திரகுமாரின் பேச்சுக்கான அழைப்புக் குறித்து சிறீதரன் பதில் !

user 06-Jan-2025 இலங்கை 146 Views

தமிழர்களுக்கான அரசியல் தீர்வு என்னவென்பது குறித்து தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகள் கொள்கை ரீதியில் பொதுநிலைப்பாடு ஒன்றுக்கு வரவேண்டியது அவசியம் என வலியுறுத்தியுள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன், தற்போதைய சூழ்நிலையில் தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றுபடாமல் தமிழர்களுக்கு வரலாறு இல்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். 

பொதுத்தேர்தல் முடிவுகளை அடுத்து எதிர்வரும் காலத்தில் அரசால் புதிய அரசமைப்பு உருவாக்க முயற்சிகள் முன்னெடுக்கப்படும் போது, குறைந்தபட்சம் அவ்விடயத்தில் மாத்திரமேனும் தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டை கடந்த காலங்களில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வெளிப்படுத்தியிருந்தார். 

அதனை முன்னிறுத்தி இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சிவஞானம் சிறீதரன் மற்றும் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரைக் கடந்த மாதம் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார்.

அதன்போது, தமிழர்களுக்கான தீர்வு விடயத்தில் தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தைச் சிறீதரன் மற்றும் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் ஏற்றுக்கொண்டிருந்தனர்.

இவ்வாறானதொரு பின்னணியில் தற்போது தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத் திட்ட வரைவு குறித்து தமிழ்த் தேசியக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடுவதற்கு உத்தேசித்திருப்பதாகவும், எதிர்வரும் 7ஆம் திகதி நாடாளுமன்றம் கூடவிருக்கும் நிலையில், அன்றைய தினம் சிறீதரன் மற்றும் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோருடன் கலந்துரையாடி அச்சந்திப்புக்குரிய திகதியைத் தீர்மானிக்கவிருப்பதாகவும் கஜேந்திரகுமார் தெரிவித்திருக்கின்றார்.

இது பற்றி சிறீதரனிடம் வினவியபோது, தமிழ் மக்களின் நலனை முன்னிறுத்தி தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட்டுத்தான் ஆகவேண்டும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை எனவும், அதனை இலக்காக கொண்ட முயற்சிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன எனவும் குறிப்பிட்டார்.

அதேவேளை இது குறித்து முதலில் தமது கட்சிக்குள் கலந்துரையாடித் தீர்மானிக்க வேண்டியிருப்பதாக சுட்டிக்காட்டிய அவர், அதனைத் தொடர்ந்து தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு குறித்து தமிழ்த் தேசியக் கட்சிகள் கொள்கை ரீதியில் பொது நிலைப்பாடு ஒன்றுக்கு வரவேண்டியது அவசியம் என்றும் வலியுறுத்தினார்.

எது எவ்வாறிருப்பினும், தற்போதைய சூழ்நிலையில் தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றுபடாமல் தமிழர்களுக்கு வரலாறு இல்லை எனவும் சிறீதரன் சுட்டிக்காட்டினார்.

 

 

 

 

Related Post

பிரபலமான செய்தி