என்னை சுட்டு வீழ்த்துங்கள்!

user 23-Jan-2025 இலங்கை 158 Views

என்னை இந்த அரசாங்கம்  புலி, புலி என்று அடையாளப்படுத்துகின்றது. இப்படி கூறி ஏன் மன உளைச்சலுக்கு என்னை உள்ளாக்குகின்றீர்கள். என்னை விடுதலைப் புலியாக கருதினால் என்னை கைது செய்யுங்கள். இல்லையென்றால் சுட்டு வீழ்த்துங்கள். இந்த அரசாங்கம் படுகொலைகளை செய்துள்ளது.  படுகொலை செய்து வந்த அரசாங்கம் தான் இது என்று நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.

1980ஆம் ஆண்டுகளில் எவ்வளவு மக்களை ஆட்சிக்கு வந்துள்ள இந்த அரசாங்கத்தைச் சேர்ந்தவர்கள் கொலை செய்துள்ளார்கள். பல படுகொலைகளை செய்த தரப்பு இது என்றும், முடிந்தால் தன்னையும் கொலை செய்து விடுமாறும் தெரிவித்த அர்ச்சுான எம்.பி யுத்தத்தின்போது இலட்சக்கணக்கான தமது மக்கள் முள்ளிவாய்க்காலில் வைத்து கொலை  செய்யப்பட்டுள்ளார்கள் என்பதையும் சுட்டிக்காட்டினார். 

அரசாங்கத்திற்கு வழங்கிய முழு ஆதரவினையும் இன்றிலிருந்து முழுதுமாக மீளப் பெற்றுக் கொள்கின்றேன் எனவும் அவர் குறிப்பிட்டார்.  

நாடாளுமன்றத்தில் இன்றையதினம் இடம்பெற்று வரும் அமர்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில், 

64 நாட்கள் ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு கதைப்பதற்கு இடம் கொடுக்காவிட்டால் அது இந்த அரசாங்கத்தினுடைய வெட்கம்கெட்ட செயல். ஏன் இவர்கள் பயப்படுகின்றார்கள். எனக்கு கதைப்பதற்குரிய நேரத்தை வழங்கவில்லை என்று கேட்டால் அதற்கு ஒரு குழுவினை நியமித்துள்ளனர். நான் பல நாட்கள் காத்திருந்துள்ளேன். இது எந்த வகையில் நியாயம்.

நாடாளுமன்ற உறுப்பினரான எனக்கு 36 நாட்கள் கதைப்பதற்கு அனுமதி வழங்காமல் முதலாவது நாளாக நான் உரையாற்றுவதற்கு கூட எனது சொந்த பிரச்சினையைப் பற்றி பேசுவதற்கான அவசியத்தை இந்த அரசாங்கம் எனக்கு ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றது.

இன்றில் இருந்து இந்த அரசாங்கத்திற்கு எனது மனதால் நான் கொடுக்கின்ற அனைத்து ஆதரவுகளையும் மீளப் பெற்றுக் கொள்கின்றேன். இன்றில் இருந்து உண்மையான எதிர்க்கட்சியாக நான் செயற்படுவேன்.

எனக்கு எதிராக 24 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. வாகனத்தின் முன் விளக்குகளை ஒளிரவிட்டதற்காக கைது செய்கிறார்கள். ஒரு சிங்கள நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தால் இது நடக்குமா. இந்த விடயத்தை நான் பாரிய கவலையுடன் நான் முன்வைக்கின்றேன்.

மிகப் பெரிய எதிர்பார்ப்பு இந்த தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தின் மீது இருந்தது. யாழ்ப்பாணத்து மக்கள் பாரிய எதிர்பார்ப்பில் மூன்று எம்.பிக்களை தெரிவு செய்திருக்கின்றார்கள். ஆனால் எனக்கு இங்கு கதைப்பதற்கு கூட நேரம் கொடுக்கப்படுவதில்லை.

இங்கு தமிழ் சிங்கள மக்கள் ஒன்றாக வாழ வேண்டும் என்றால் உயரிய சபையான நாடாளுமன்றத்தில் உண்மையான விடயங்களை கதைப்பதற்கு நேரம் ஒதுக்கப்பட வேண்டும். ஏன் இந்த அரசாங்கம் ஒரு சுயேட்சைக் குழு உறுப்பினரைப் பார்த்துப் பயப்படுகின்றது. இந்த அரசாங்கத்திற்கு முதுகெழும்பு இருந்தால் இன்றில் இருந்து இந்த பிரச்சினையை முடித்துக் காட்டுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார். 

Related Post

பிரபலமான செய்தி